பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/34

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியும் பாரதிதாசனும் 29

“ஆங்கிலேயன் ஒரு தேச பக்தனுக்குக் கூறுவது” என்ற பாடலும், “தேச பக்தன் ஆங்கிலேயனுக்குக் கூறும் மறுமொழி” என்ற பாடலும் “நடிப்புச் சுதேசிகள்” என்ற பாடலும் இளங் கவிஞராகிய பாரதியின் மனம் எந்தத் திசையில் சென்றது என்பதை நமக்கு எடுத்துக்காட்டுகின்றன, வெறுப்பு, சினம், மாற்சரியம், தன்னால் ஒன்றும் செய்ய முடியாமையினால் ஏற்படுகின்ற கழிவிரக்கம் ஆகிய உணர்ச்சிகளே கவிஞன் மனத்தை ஆட்கொண் டிருந்தன என்று அறிய முடிகிறது.

இத்தகைய நிலையிலிருந்து கவிஞர் கொஞ்சம் கொஞ்சமாக மாறிப் பண்பட்டு, உள்ளத்தில் வெறுப்பு, சினம் என்பவற்றிற்குப் பதிலாக, இரக்கமும் சகிப்புத்தன்மையும் நிரம்பப் பெறுகிறார். அத்தகைய மனோ நிலையில்தான் “செந்தமிழ் நாடு! என்னும் போதினிலே” என்ற பாடலும் “மாஜினியின் பிரதிக்ஞை”, “பெல்ஜிய நாட்டு வாழ்த்து”, “புதிய ருஷ்யா” என்ற பாடல்களும் முகிழ்க்கின்றன. மேலும், இந்த நாடுகள் பெற்ற வெற்றியைக் காணும் பொழுது தம்முடைய நாட்டிற்கும் இறுதியில் வெற்றி கிடைப்பது உறுதி என்ற எண்ணம் கவிஞர் மனத்தில் தோன்றியிருத்தல் வேண்டும். இந்த அமைதி தோன்றியவுடனேயே விடுதலைப் போராட்டத்தில் வெற்றி கிடைக்க வழியில்லாமல் அதனைத் தடை செய்வது எது என்ற வினாவும் அடுத்துத் தோன்றியிருக்கும். இந்த இரண்டாவது வினாவிற்கு விடை. காண முற்பட்ட கவிஞர் தமிழர் வரலாற்றையும், தமிழ் மக்கள் பண்பாட்டையும் நன்கு சிந்தித்துப் பார்த்து, வெற்றி கிடைக்காமைக்குரிய காரணம் நம்மிடமே இருக்கிறது என்ற பேருண்மையை

பா- 3