பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/4

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பதிப்புரை

பேராசிரியர் அ. ச. ஞான சம்பந்தன் அவர்கள் தமிழும் சமயமும் தழைத்தோங்க இடையறாது பணியாற்றி வரும் திறலினர். இவர் தம் பேச்சும் எழுத்தும்- சுவையும் பயனும் மிக்கவை. இவர் தமிழ் இலக்கியங்களில் பேரீடுபாடு கொண்டு இலக்கிய ஆராய்ச்சி செய்யும் நுண்மாண் நுழைபுலம் மிக்கவர்.

பச்சையப்பன் கல்லூரியில் திறனாய்வுத்துறை புதுவதாக தொடங்கப்பெற்ற ஞான்று ஆய்வு மாணவர்க்காக எழுதப்பெற்றது “இலக்கியக் கலை” என்னும் திறனாய்வு நூல். அதனாலேயே திறனாய்வுத் தந்தை என்று பாராட்டும் பெற்றவர்.

மதுரைப் பல்கலைக் கழகத்தில் 1970-ல் இவ்வாசிரியர் நிகழ்த்திய ‘அன்னபூரணி இராமையா’ நினைவுச் சொற்பொழிவே பாரதியும் - பாரதிதாசனும் என்னும் இந்நூல். பாரதியைப்பற்றியும் பாரதிதாசனைப்பற்றியும் இவ்வாசிரியர் தரும் செய்திகள் படித்து இன்புறத்தக்கன.

இந்நூலில், இன்றைய இலக்கியம், சங்கரதாஸ் சுவாமிகளின் கவிதைத் திறன் ஆகிய இரு கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

இதனை எம் வெளியீடாக வெளியிட ஒப்புதல் அளித்த இப் பேராசிரியருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்நூலாசிரியரின் பல நூல்களும் எம்பதிப்பக வழி வெளிவந்துள்ளன; வாராதனவும் வரஉள என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

கங்கை புத்தக நிலையத்தார்