பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியும் பாரதிதாசனும் 0 83

வகுக்கும் இலக்கணத்திற்கு இவை பொருந்தி வரா, எனவே, வாழ்க்கையில் அனுபவிக்க முடியாத சுக போகங்களையெல்லாம் கற்பனையில் அனுபவிக்க வேண்டுமென்று கருதிய கலைஞர் கற்பனைப் படைப்பை ஞானரதம்' என்ற பெயரில் படைக் கின்றார். துயரத்தில் ஆழ்ந்திருக்கும் மனம் அதிலிருந்து தற்காலிகமாக விடுதலை பெற்றுத் துயரத்தை மறந்திருப்பதற்காகப் படைக்கின்ற கலையை- Escapism Art- துயர் தப்பு நெறிக் கலை என்று மேனாட்டார் கூறுவர். பாரதியின் ஞான ரதம் அத் தொகுப்பைச் சேர்ந்தது என்று கூறல் இயலாது. ஆனால், அக் கற்பனை தொடங்குகின்ற விதம் அவ்வாறு எண்ண வைக்கிறது என்று கூறினால் தவறு இல்லை.

அவல நிலையிலிருந்து சிறிது விடுதலை பெற வேண்டும் என்று நினைக்கின்ற மனம் கற்பனையில் இறங்குவது மனித இயல்பு. அப்படிக் கற்பனையில் உலாவும்பொழுது கந்தர்வ லோகத்தையும் சத்திய லோகத்தையும் பிரம லோகத்தையும் கற்பனை செய்வதில்லை. மூட நம்பிக்கை, பெண்ணடிமை, பெண்ணுக்கு மட்டும் கற்பு என்பவை நிரம்பியுள்ள இந்த உலகத்தை மாற்றியமைக்க விரும்புகிறார் கவிஞர். அவருடைய பாடல்களில் இக் கருத்துக்கள் நிரம்ப வருகின்றன. என்றாலும், இவை இவ்வாறு இருக்க வேண்டும் என்று கூறிக் கூறி அலுத்துப்போன கவிஞருக்குத் தாம் விரும்பும் முறையிலேயே அனைத்தும் அமைந்துள்ள ஒர் உலகத்தைப் படைக்கத் தோற்றுகிறது.