பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4 அ. ச. ஞானசம்பந்தன்

படைப்பாளரும் திறனாய்வாளர்களும் இந்த வினாவிற்கு என்ன விடை கூறுவார்களோ, நாம் அறியோம். இரசிகன் என்ற முறையில் இவ்வினாவிற்கு விடை. சொல்ல வேண்டுமேயானால், அளவால் பெரும் பங்கு, வளர்ச்சியும், தரத்தால் மிகமிகச் சுருங்கிய வளர்ச்சியும் தமிழ் இலக்கியம் பெற்றுள்ளது என்றே விடை கூறத் தோன்றுகிறது. இலக்கியத்தின் தரத்தை எப்படிக் காண்பது? அதற்கெனச் சில அளவுகோல்கள் உண்டு. எனினும், இரசிகனுடைய மனநிலை, மன வளர்ச்சி, கல்வி அறிவு, அனுபவ ஞானம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இலக்கியத்தின் தரத்தை அளக்க முற்படுகின்றார்கள். இந்த அளவுகோல்களைப் பயன்படுத்து முன்னர் மேலே கூறிய இயல்புகளைப் பெற்றவர் பெறாதவர் ஆகிய இரண்டு பகுதியாரும் சேர்ந்து பயன்படுத்துகின்ற ஒரு புதிய அளவுகோல் உண்டு. அதாவது, தோன்றிய ஓர் இலக்கியம் காலத்தை வென்று வாழக்கூடிய தன்மை பெற்றிருக்கிறதா என்று கணிப்பதுதான் அந்தப் புதிய அளவுகோல்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தோன்றிய ஒருசில பாடல்களை இன்றும் மறக்க முடியவில்லை. ஆனால், அவற்றைப் படிப்பவர் மிகச் சிலர். சென்ற ஆண்டு அனைவராலும் புகழப்பட்ட ஒரு படைப்பு இந்த ஆண்டில் மறக்கப்பட்டு விடுகிறது. இந்தக் கால் நூற்றாண்டில் தோன்றிய சிறுகதைகள், புதினங்கள், கவிதைகள் ஆகியவற்றுள் மக்களுடைய மனத்தில் சாகா வரம் பெற்று நிலைத்துள்ளவை எத்தனை, சிறுகதைகள் எத்தனை, புதினங்கள் எத்தனை, கவிதைகள் எத்தனை என்று காண்டல்: வேண்டும். தோன்றிய ஓர் இலக்கியத்தில் எதனையும்,