பக்கம்:பாரி வேள்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வழிவழியே புரந்துவரும் பாண்டிய மன்னனோடு பழகும் தங்களுக்குக் குறுநில மன்னர்கள் பொருளாகத் தோன்றமாட்டார்கள். ஆயினும் உண்மையான ஆர்வமுடைய ஒருவர் பேரன்போடு அழைக்கிற அழைப்பு இது. தம்மையே அர்ப்பணம் செய்யச் சொன்னாலும் அவ்வாறு செய்து தங்களை வரவேற்று உபசரிக்கக் காத்து நிற்கிறார் பாரி வேள். அவர் உள்ளத்தில் உள்ள ஏக்கத்தை யாரும் அளவிட முடியாது. ஒரு கால் தாங்கள் வந்து கண்டு உணர்ந்து தங்கள் பாடலால் வெளியிட்டால் வெளியிடலாம்" என்று தூது வந்த பெரியவர் சொன்னார்.

கபிலர் அதைக் கேட்டார். "மாணிக்கம் உருவத்தால் சிறியது; கல் மிகப் பெரியது. அதனால் மாணிக்கத்துக்குக் குறைபாடு உண்டோ? அதன் மதிப்பை உலகமே நன்கு உணரும். பாரிவேளைப் புகழால் முன்பே அறிவேன். அவரைப் பார்க்கவேண்டும் என்ற விருப்பம் எனக்கும் உண்டு" என்று அவர் கூறியதைக் கேட்டபோது, வந்த பெரியவருக்கு உண்டான மகிழ்ச்சியை அளவிட முடியுமா?

கபிலர் பாரிவேளைப் பார்க்கப் புறப்பட்டார். அவர் வருவதை ஏவலாளர்கள் முன்பே பாரிக்கு அறிவித்தார்கள். பறம்பு மலையினின்றும் கீழ் இறங்கி வந்து அடிவாரத்து ஊரில் ஓரிடத்தில் கபிலரை வரவேற்க வேண்டியவற்றைச் செய்தான் பாரி. வேறு பல புலவர்களையும் உடன் அழைத்துச் சென்றான். தன் ஆட்சியில் உள்ள அதிகாரிகளையும் உடன் இருக்கச் செய்தான். பறம்பு நாட்டில் உள்ள செல்வர்களையும் பெரியோர்களையும் ஆள் விட்டு அழைத்து வரச் செய்தான். அலங்காரம் செய்த பந்தலில் கபிலருக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/19&oldid=958535" இலிருந்து மீள்விக்கப்பட்டது