பக்கம்:பாற்கடல்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

லா. ச. ராமாமிருதம்


ஆசியேதான் தரிசனம், ஆசியில்லாமல் தரிசனமில்லை. தரிசனம் என்பது என்ன?

என் நரம்பின் விதிர்விதிப்பில் ஏற்கெனவே அதனுள் புதைந்து கிடந்து, அவ்வப்போது தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் வாழ்வின் இசை, இதன் விளைவாய் என் மகிழ்ச்சியின் மறு பெயர் அஞ்சலி. அவள் பாதகமலங்களில் போய்ச் சேரும் நேரம், நேமம் முன் அறிய எனக்குச் சக்தி ஏது? இந்த அவள் யார்? நட்ட கல்லெல்லாம் சிவமாய நம்நாட்டுப் பண்பில் அவரவர் தன் உபாஸனையில் சிறுதுளி பெருவெள்ளமாய், சக்தி என்றும், விஞ்ஞான பாஷையில் ether என்றும், எனக்குக் குலதெய்வம் பெருந்திரு என்றும், அவரவரின் நடமாடும் தெய்வம் தாய் என்றும், பொதுவாக உயிரின் கவிதா தேவி என்கட்டுமா?

ஆனால் இந்த உள்பூரிப்புகள் ஒன்று குழைந்து தொடர்ந்த ஒரே நிலையாகிவிடில், இந்த உடல், அதன் பல குறைகளில், தாங்க முடியாது; ககனத்தில் பறந்துகொண்டேயிருக்க முடியாது. அவ்வப்போது இறங்கி பாதத்தடியில் அதன் தைரியத்தை உணரத்தான் இந்த பூமி. மாற்றியே சொல்கிறேன். இந்த பூமி இருப்பதால்தான் கவிதையென்றும், தரிசனமென்றும், பாஷையென்றும் அவ்வப்போது சிறகு விரிக்க முடிகின்றது.

ராஜாளியின் தனிமையில்
புறாவின் கூட்டத்தில்
ஹனுமானின் தாண்டலில்

இந்தச் சிறகுப் பரவசம், அவரவர் அடைந்திருக்கும் பக்குவத்துக்கேற்ப நேர்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/122&oldid=1533974" இலிருந்து மீள்விக்கப்பட்டது