பக்கம்:பாற்கடல்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

131


அண்ணா அடிக்கடி சொல்வார்: ”இந்த மன்னியிருக்கிறாளே, அவள் தலையில் பிரம்மா எல்லோருக்கும்போல் எழுதவில்லை. என்ன ஆயுதம் கொண்டு எழுதினானோ? இப்படியும் ஒரு பரம சூன்ய ஜாதகம் உண்டா?” என்று வேதனையில் அங்கலாய்ப்பார். ”அம்முவாத்துச் 'சாப்பா வேறு விழுந்தபின் விமோசனமேது?”

ஆனால் மன்னி என்ன நினைத்தாள்? அவள் குழந்தைப் பருவத்தில் நினைத்ததைக் குறிக்கவில்லை.

போகப் போக.

கண்ணதாசன் பாடல் அற்புதமாக ஆரம்பிக்கின்றது.

இரண்டு மனம் வேண்டும்
நினைத்து வாட ஒன்று
மறந்து வாழ ஒன்று

ஆனால், நினைப்பதற்கே மன்னியிடம் மனம் என்று ஒன்று இருந்ததோ?

பெண்களுக்கு மானத்தைப் பற்றி மாறி மாறி உபதேசம் செய்வதே ஒழிய, அவர்களுடைய மனத்தைப் பற்றி ஆண்களே ஆகட்டும், வெளிப்படையாகக் காட்டிக்கொண்டதாகத் தெரியவில்லை.

அடுக்குள்தான் உன் ஆலயம்.
அடுப்புதான் உன் வழிபாடு.
கல்லானாலும் கணவன்.
புல்லானாலும் புருஷன்.

உனக்கு வாய்த்ததுதான் உன் வாழ்க்கைக்கு உபதேசம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/137&oldid=1533988" இலிருந்து மீள்விக்கப்பட்டது