பக்கம்:பாற்கடல்.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

237


"நானும் பார்க்கிறேன். இந்த வரலாறு பூராவே, ஏதோ சொல்ல ஆரம்பித்து, எங்கெங்கேயோ போய், எதிலேயோ முடிக்கிறாய். அதுவும் முடிவற்ற முடிவு! சொல்ல வந்ததுதான் என்ன?”

சபாஷ்! இந்த ஆக்கத்தின் இலக்கணமே நீ சொன்னபடிதான். புரிந்து கொண்டுவிட்டாய் என்பதிலேயே என்ன மகிழ்ச்சி! எந்தப் பிரசவத்திலும் அனுபவ ஸ்திரியான மருத்துவச்சியின் பங்கு பக்க உதவிதான். தான் வெளிவரும் வழி விதம், தன்னை கவனித்துக் கொள்ள ஜீவனுக்கு எப்பவுமே தன் சக்தி உண்டு. அதன் வழிதான் உற்ற வழி எழுத்திலும், எழுத்தாளனின் பங்கு அப்படித்தான். தன் மேதாவித்தனத்தைக் காட்டாமல், சமய உதவியோடு தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

"நீ எதை வேணுமானாலும் எழுதுடா, போடுகிறேன்." தி.ஜ.ர. சக்தி ஆசிரியராக இருந்தபோது எனக்குக் கொடுத்த தைரியம்.

அலங்காரம் செய்த பிணத்தைக காட்டிலும் உயிருள்ள அவலக்ஷணமான குழந்தையே சிறந்தது. ஏண்டா, குழந்தைக்கு உயிரோ கொடுத்துவிட்டாய். ஆனால் அது எவ்வளவு முரட்டுத்தனமாக, சில சமயங்களில், உன் எழுத்தில், வக்ரமாக இருக்க வேண்டியது அவசியமா? நீயே யோசித்துப் பார்." இதுதான். இவ்வளவுதான், எப்பவுமே அவர் விமர்சனம், வகுப்பு நடத்தமாட்டார். பிரசங்கம் பண்ணமாட்டார். லேசாக, ஜாடையாக, சமயத்தில் ஒரு வார்த்தை; திருத்தல்கூட இல்லே. அத்துடன் சரி. குருவே நமஸ்காரம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/243&oldid=1533324" இலிருந்து மீள்விக்கப்பட்டது