பக்கம்:பாலஸ்தீனம்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிரிவினைப் பிரச்னை

85

மூலம் அவசர உத்திரவுகள் பிறந்தன; ராணுவ கோர்ட்டுகள் ஸ்தாபிக்கப்பட்டன; ஆயுதமெடுத்துச் செல்வோருக்கு மரண தண்டனையென்று சொல்லப்பட்டது; பத்திரிகைகள் பலத்த கண்காணிப்பில் வைக்கப்பட்டன; சில பிரதேசங்களில் 24 மணி நேரமும், ஜனங்கள் அவரவர் வீடுகளை விட்டு, வெளியே வரக் கூடாதென்று உத்திரவிடப்பட்டது. விசேஷ உத்திரவுகள் பெற்றாலன்றி, எங்கும் பிரயாணஞ் செய்ய முடியாது. கலகஞ் செய்தவர்களுடைய சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சந்தேகிக்கப்பட்ட நபர்களிருக்கும் கிராமங்களுக்குப் பொதுவாக அபராதம் விதிக்கப்பட்டது. எந்த வீட்டிலேனும் கலகக்காரர்கள் இருப்பதாகச் சந்தேகிக்கப்பட்டால், அந்த வீடு உடனே தகர்க்கப்பட்டது. 1938ம் வருஷம் கடைசி பாகத்தில், சில இடங்களில் ஆகாய விமானங்கள் கூட, கலகத்தை அடக்கும் பொருட்டு, உபயோகிக்கப்பட்டன. பிரிட்டிஷ் துருப்புகளுக்கும், யூதர்களுக்கும் அடிக்கடி உயிர்ச் சேதங்கள் ஏற்பட்ட வண்ணமாகத்தானிருக்கின்றன. ‘பாலஸ்தீன் போஸ்ட்’ என்ற ஒரு பத்திரிகை கணித்த கணக்குப்படி 1938ம் வருஷம் ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை ஒரு வருஷத்தில், பாலஸ்தீன முழுவதிலும் 2,000 பேர் கொல்லப்பட்டனர்; 1700 பேருக்குக் காயம் ஏற்பட்டிருக்கிறது. கொல்லப்பட்டவர்களில் 486 பேர் அராபியப் பொது ஜனங்கள்; 1,138 பேர் அராபிய கலகக்காரர்கள்; 292 பேர் யூதர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலஸ்தீனம்.pdf/95&oldid=1672443" இலிருந்து மீள்விக்கப்பட்டது