பக்கம்:பாலைக்கலி.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் திணை விளக்கம் 85. உரிப்பொருள் என்பன, உள்ளத்தே எழுகின்ற மனவுணர்வுகளுக்குக் காரணமாக விளங்கும் உந்துதல்களாகும். அவை ஐந்திணைகளையும் ஒட்டிப்பத்து வகையாகக் கூறப்படும்.' அவை, 1. குறிஞ்சி புணர்தலும், புணர்தல் நிமித்தமும், 2. பாலை - பிரிதலும், பிரிதல் நிமித்தமும், 3. முல்லை இருத்தலும், இருத்தல் நிமித்தமும் 4. மருதம் - ஊடலும், ஊடல் நிமித்தமும், 5. நெய்தல் இரங்கலும், இரங்கல் நிமித்தமும். இவைதாம், செய்யுள் செய்வார்க்குப் பெரிதும் கனிவெழச் செய்யும் சிறப்புடைய அடிப்படைப் பொருள்களாகும். இவைதாம், பிறபிற திணைகளுள்ளும் வருதற்கும் உரியனவே என்பதும் அறிதல் வேண்டும். எடுத்துக்காட்டாக, குறிஞ்சியாகிய மலையும் மலைச்சார்ந்த இடமும், இயற்கைச் செவ்வியிற் சிறந்தனவாய், இயற்கை வளங்களாலே நிறைந்தனவாய், இளம் பருவத்தாரிடையே புணர்தலும், புணர்தல் நிமித்தமாகச் செல்லலும், இவை பற்றி எல்லாம் நினைத்தலும், அணுக்கரிடையே தம்முணர்வை எடுத்துக் கூறலும் ஆகியவற்றிற்குப் பொருந்துவனவாய் அமைந்திருக்கும் தன்மையிற் சிறந்தனவென அறியலாம். தனித்து வேட்டை மேற்செல்லும் இளைஞனும், புனங்காத்துத் தனித்திருக்கும் கன்னியும் கண்டுகாதலுற்று ஒன்றுபடுவதற்கு ஏற்ற நிலைக்களனும் இதுவாகும். இந்தத் துணிவு நிகழ்தற்கான வாழ்வியல் அமைந்தது குறிஞ்சியாதலும் நினைக்க வேண்டும். பாலையென்பது, முல்லையும் குறிஞ்சியும் முறைமுறை திரிந்து, வெம்மையாலே எங்கும் வளமை தீய்ந்து போயுள்ள நிலத்தைக் குறிப்பதாகும். இதனையொட்டியே பிரிவையும், பிரிதல் நிமித்தமாக ஏற்படும் பெருந்துயரத்தையும் இதற்கு உரிமைப்படுத்தினர் ஆகலாம். ஆறலை கள்வரும் கொலையும் துன்பமும் வெம்மையும் இந்நிலத்தின் சிறப்பான தன்மைகள். முல்லையென்பது, காடும் காடு சார்ந்த இடமும் ஆகும். இந் நிலத்து ஆயர்கள் வாழ்வியல், ஆடவர் நிரைமேய்த்தற்குப் பகற் பொழுதெல்லாம் காட்டிடத்தே சென்றிருத்தலும், மகளிர் பாற்பயனைக் கொண்டு விலைமாறி வருதலும் போன்ற ஒழுக்கத்தோடு ஒட்டியதாகும். ஏறு தழுவி வெல்பவனுக்கே மகளைத் தரும் மரபும், அவனையே விரும்பி ஏற்கும் கன்னியர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/93&oldid=822091" இலிருந்து மீள்விக்கப்பட்டது