பக்கம்:பாலைச்செல்வி.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி இ. 141 சேர்க்காதே திரும்பி விடுவன். அந்நிலையில் அவனைக் காணும் ஊரார், 'எடுத்த வினையை இடையே கைவிடாது, கடைபோகளவும் முடிக்கலாகாக் கைத்திறன் அற்றவன் என்றன்றோ பழிப்பர்? ஆகவே, புகழ் கருதிப் பொருள் தேடிச் செல்லும் இவன், பொருள் சேர்த்தும் புகழ் பெறான், மாறாக வறிதே மீண்டு பழியே பெறுவன். மனைவியின் கடமை தன் கணவனுக்குண்டாம் பழிச் சொல்லினைத் தடுத்தலன்றோ! 'தகைசான்ற சொல் காத்துச் சோர்விலாள் பெண் ' என்றன்றோ வள்ளுவரும் கூறினார். கடனறிந்த மனைவியாக யான் வாழ வேண்டின், இந்நிலையில், பொருள் தேடிப் போகும் அவனைத் தடுத்து நிறுத்துதல் வேண்டும்,” எனவுந் துணிந்தாள். அவ்வாறு துணிந்தவள், உடனே தன் கணவன்பாற் சென்று, "காதல! யான் கூறும் சில சொற்களைக் கருத்துான்றிக் கேட்குமாறு வேண்டுகிறேன். பொருள் தேடும் கருத்துடையாய் என அறிந்தேன். என் அழகைக் கண்டும், அவ்வியற்கை அழகை மேலும் அழகாக்க ஒப்பனை பல புனைந்தும் மகிழும் உன் காதலின் ஆற்றலைப் பொருள் கருதிப் பிரிய நினைக்கும் இந்நிலையில், சற்று எண்ணிப் பார்ப்பாயாக அக்காதலின் ஆற்றல் முன், அப் பொருளாசை என்னாம் ? அவ் வாற்றலை மீறி, அவ்வாசை எத்துணை நாட்களுக்கு வாழும்? அவ்வாசை, அவ்வாற்றலுக்கு விரைவில் பணிந்து போவது உறுதி. ஆகவே, அவ்வாசையின் துணையை நம்பிப் பொருள் தேடிப் போவது நன்றன்று. நிற்க, 'பொருளாசை காதலுக்குப் பணிந்து போய்விடும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/143&oldid=822147" இலிருந்து மீள்விக்கப்பட்டது