பக்கம்:பாலைச்செல்வி.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி இ. 153 உடன் கொண்டு செல்வது இயலாது. ஆதலின் அவ் வெண்ணம் விடுத்து விடை தந்து அனுப்புவாயாக!” என்று கூறி வேண்டிக் கொண்டான். காட்டின் கொடுமை கேட்டுக் கலங்கி விடுவள்; ஆங்கு வர அஞ்சிப் போக விடை தருவள் என எண்ணினான் அவன். ஆனால் அவள் கொண்ட முடிவோ வேறு. கணவன் உள்ள இடமே நாடு. அது வறண்ட பாலையேயாயினும், அதுவே மழையும், ஆறும், மர நிழலும் வாய்ந்த மருத நிலமாம். அதற்கு மாறாக, மழையாலும், மாநதிகளாலும், மரங்களின் செறிவாலும் மாண்பு மிக்க மருத நிலமேயாயினும், கணவன் உடன் இலனேல், அதுவே வறண்ட பாலையாய்ப் பெருந்துயர் செய்யும் எனும் கருத்தினள் அவள். அதனால், காட்டின் கொடுமை கூறி மறுத்த தன் கணவனை நோக்கி, "அன்ப! இன்ன இடத்தில், இத்துணைக் காலம் இருக்கும் எனும் வரையறையற்றது காற்று. அதைப் போன்றது என் வாழ் நாள். அவ்வாழ்நாள், இங்குப் பெய்யும் வற்றா மழையினை அரணாகக் கொள்வதில்லை. நின்னைப் பிரியாது, நின் அகத்தைத் தழுவிக் கிடக்கும் அவ் அன்பினையே அரணாகக் கொண்டுள்ளது. அவ் அரணை இழந்து என் வாழ்நாள் வாழாது. அன்ப! ஆற்றில் ஒடிக் கடலுள் புகுந்த நீர், மீளவும் அவ்வாற்றுள் புகுவதில்லை. அதைப் போன்றது என் இளமை. கழிந்தால், அதை மீட்டும் பெறுதல் இயலாது. அவ்விளமை, சங்குப் பாயும் ஆற்றுநீர் உண்டு வாழ்வதினாலேயே அழியாது நிலை பெற்றுள்ளது என எண்ணற்க. அது, உன் உள்ளத்தில் ஊற்றெடுத்துப் பாயும் அன்பெனும் தெளி நீரையே அடிப்படையாகக் கொண்டு வாழ்கிறது. அவ் அன்பு அழியின், அவ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/155&oldid=822160" இலிருந்து மீள்விக்கப்பட்டது