பக்கம்:பாலைச்செல்வி.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி இ. 247 மலர்களைப் பரந்து கிடக்கும் சிறு மணல்மீது, ஒவியம் வல்லான் தீட்டும் உயிர் ஓவியங்கள் போலும் உருவு பல பெறுமாறு ஒதுக்கி அழகு செய்து ஒடும், சிறு சிறு அருவிகளைக் கொண்ட ஆறும், அது இளவேனிற் காலத்தின் தொடக்க காலம் என்பதை உணர்த்த, உணர்ந்து வருந்தினாள். குயில் குரல், இளவேனிற்பருவம் இளங் காதலர்க்கு இன்பம் தருவது; அக்காலத்தில், மனையகத்தே இருந்து மகிழ்ந்து வாழாது பிரிந்து கிடந்து வருந்தி வாழ்வார், வாழும் வகையறியாதாராவர்! எனத் தன்னை நோக்கி எள்ளி நகைப்பதாக எண்ணி இடருற்றாள். கைவிட்டுச் சென்ற கணவன், தன்னைக் கனவினும் நினைந்திலன் போலும் என எண்ணிக் கலங்கிற்று அவள் உள்ளம். - அந்நிலையில் ஆங்கு வந்த தோழி, கலங்கிய அவள் நிலையைக் கண்டு, "அன்புடையாய்! வாய்மை வழுவாத வழுதி நாட்டில் வாழ்பவர் நின் கணவர். ஆதலின், அவர், தாம் கூறிய சொல் பொய்யாகாவாறு குறித்துச் சென்ற நாளன்று நில்லாது வந்து சேர்வர். வருந்தாதே!” என்று கூறித் தேற்றினாள். அது கேட்ட அப்பெண், "தோழி! வண்ணத்தாலும் வடிவாலும் பல்வேறு வகைப்பட்ட வண்டுகள், கூடி ஆரவாரித்து, இயற்கைக் காட்சிகளால் இன்பம் மிக்க இவ்வையையாற்றின் இருமருங்கும், அவ்யாற்றின் ஊற்று நீர் ஊட்டி வளர்க்க வளர்ந்த முல்லை மலர்களிற் படிந்து, தேன் உண்ணும் காலமன்றோ நம் கணவர் வருவதாக வாக்களித்துச் சென்ற காலம்? அதோ பார், அவ்வாற்றின் கரைக்கண் எழும் அவ் வண்டோசையினை! அவர் கூறிய காலம் வந்து விட்டது. அவர் வந்திலர். இனி, வருந்தாது எவ்வாறு வாழ்வேன்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/250&oldid=822265" இலிருந்து மீள்விக்கப்பட்டது