பக்கம்:பாலைச்செல்வி.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 இ புலவர் கா. கோவிந்தன் அவ்வாறு தேடிச் சென்ற செவிலி, எதிரே அந்தணர் சிலர் வருவதைக் கண்டாள். ஒரு கையில், காயும் ஞாயிற்றின் கதிர்களைத் தடுத்து நிழல் செய்யும் குடை பிடித்துக் கொண்டு, கமண்டலம் தாங்கிய உறியை, முத்தீ வணங்கும் முனிவர் என்பதை உணர்த்தும் முக் கோலுடனே தோளில் தாங்கிக் கொண்டு, காடென்றும், மலையென்றும் அவை இரண்டுங் கலக்கும் பாலை யென்றும் பாராது, எங்கும் திரிந்து வாழும் இயல்பினராய அவ்வந்தனர், வழியில் தன் மகளைக் கண்டிருத்தலும் கூடும் எனக் கருதினாள். அவர்கள் அண்மையில் வந்ததும், அறத்தைத் தவிர மறத்தை மனதாலும் நினையாத் துய்மை, ஐம்பொறிகள் ஏவுமாறு தாம் ஆடாது, தாம் ஏவுமாறு அவற்றை ஆட்டி அடிமை கொள்ளும் ஆற்றல், இவை போலும் சிறந்த பல கொள்கைகளும், அக்கொள்கை வழி ஒழுகும் ஒழுக்கமும் வாய்ந்த அவர்கள் பண்பைப் பாராட்டி வணங்கி நின்று, ஐயன்மீர்! என் மகளாம் உரிமையுடையாள் ஒரு பெண்ணும், என்போல்வாள் ஒருத்தி பெற்ற ஒர் ஆண் மகனும், தந்தையும் தாயும் முன்னின்று முடித்து வைக்க மணந்து வாழக் கருதாது, எவரும் அறியாவாறு, தனிமையில் தாமே கண்டு காதல் கொண்டு, கந்தர்வ மணம் புரிந்து கொண்டனர். அவர்கள் அவ்வாறு, யாங்கள் அறியாவாறு மனங்கொண்டதோடு நில்லாது, தாங்கள் பிறந்து வளர்ந்த ஊரையும், பெற்று வளர்த்த தாய் தந்தையரையும் மறந்து, இப்பாலை வழியே வந்து, எங்கோ சென்று விட்டனர். அவர்களைத் தேடி வருந்துகின்றேன் யான். அவர்களை வழியில் யாண் டேனும் கண்டதுண்டோ? கண்டீராயின், அவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/72&oldid=822327" இலிருந்து மீள்விக்கப்பட்டது