பக்கம்:பாலைச்செல்வி.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 புலவர் கா. கோவிந்தன் உலர்ந்து போன உறுதுயர் மிக்கதன்றோ நீ செல்லும் பாலைநிலம் !" என, அவன் செல்லும் காட்டின் கொடுமையினை எடுத்துக் காட்டும் நிலையிலேயே விளக்கியுரைத்தாள். ஆனால், அவள் உரைத்த அவ் அறவுரை கேட்டும், அவன் தன் முடிவினை மாற்றிக் கொண்டானல்லன். பிரிவதையே கருதி நின்றான். அவன் பிரிந்துவிடின், அவள் உயிர் பிரிந்து விடுமே என்ற அச்சம் தோழிக்கு. அதனால், அவனை எவ்வாறேனும் நிறுத்திவிட விரும்பினாள். அறவுரை கேட்டு நிற்க மறுக்கும் அவன், தன் மனைவியின் துயர்நிலை அறியின், தான் பிரியின், அப் பிரிவுத் துயர் பொறாது உயிர்விடும் அத்துணை மெல்லியள் என்பதை அறியின், தன் பிரிவினைக் கைவிடுவன் அறிவுரையால் ஆகாதது, அவள் துயர் நிலையால் ஆகும்; தன் மனைவி மாண்டு போவள் என்பதை அறிந்தும், பிரிந்து போகும் அத்துணைக் கொடியவன் அல்லன் அவன்; அவன் உள்ளம் அந்நிலையைத் தாங்காது, அதனால், அவன் மனைவியின் மென்மைத் தன்மையின் இயல்பினை, அத்தகையாள், அவன் பிரியின் என்னாவள் என்பதனை, எடுத்துரைக்கத் தொடங்கினாள். "அன்ப! ஒரு நாள், அவளும் நீயும் துயில் கொண்டிருக்குங்கால், உன்மீது கிடந்த அவள் கையை விலக்கி விட்டுச் சிறிதே விலகினாய். அவ்வாறு விலகியது வேண்டுமென்று செய்ததன்று. அச்செயல் அவளுக்கு ஆற்றொனாத் துயர் தரும் என்பதை அறிந்து செய்த செயலன்று. ஆனால், அதற்கே, அவள் நனிமிகத் துயர் கொண்டு புலம்பினாள். அதை நீ மறந்திருக்க மாட்டாய்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/82&oldid=822338" இலிருந்து மீள்விக்கப்பட்டது