பக்கம்:பாலைப்புறா.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164

இயற்கை அன்னை, ஒரு மார்பில் பால் குடிக்கும் தன் குழந்தையை, இன்னொரு மார்புக்கு எடுத்துச் செல்லும்போது, இந்த இரண்டு மார்பகத்திற்கும் இடைப்பட்ட பகுதிதான் மரணம் என்றார் தாகூர். நமது எல்லாப் பிரச்சினைகளுக்கும், மரணம் முற்றுப் புள்ளி வைக்கும் என்பதை நினைக்கும்போது, அந்த மரணமே இனிமையாகத் தெரிகிறது என்றார் நேரு... ஆனால், பயத்திலேயே பெரிய பயம் மரண பயம். மரணத்தின் மறுபக்கம் என்ன இருக்கும் என்பதை, அந்த மரணம் வழியாகக் கண்டறிய விரும்புகிறவர்கள் கூட, மரணத்தைப் பார்த்துப் பயப்படுகிறார்கள். ஆனால் மீதம் என்று வைக்காமலும், மீதி இன்றி எடுக்காமலும், தன்னை நினைப்போர்க்குத் தன்னை நினைப்பூட்டும் பிறப்பின் அணுக்களில் ஒன்றியிருக்கும் இறப்பை எதிர்நோக்கி, தற்கொலை செய்து கொள்வது, ஒரு கோழைச் செயலாகாது என்று பலர் குறிப்பிடுவதையும், உதாசீனம் செய்ய முடியாது. உறுப்புக்களை இழந்த தொழு நோயாளிகளும், இரண்டு கால்களை இழந்த முடவர்களும், பக்கவாதத்தில் படிந்தவர்களும் இந்த நிகழ்கால வாழ்க்கையை விடாப்பிடியாய்ப் பிடிக்கிறார்கள். இதற்கு கலைவாணியே ஒரு உதாரணம். மாமியார் சீதாலட்சுமி, சொல்லத்தகாத வார்த்தைகளைச் சொன்னாலும், இவள் வாழ்க்கையை முடித்துக் கொள்ள நினைத்தாலும், மரணபயம், இவளையும் வாழ வைக்கிறது. எப்படியாவது, டாக்டர் சந்திரா மூலமோ, அல்லது அந்த பழிகாரன் மனோகர் மூலமோ, இந்த விஷக்கிருமிகள் கல்யாணத்திற்கு முன்பே அவனிடம் இருந்ததை தெரியப்படுத்திய பிறகே, மரணிப்பது என்று இவளே, தனக்குத்தானாய் சமாதானம் செய்து கொண்டாள். அதே சமயம், மரணத்தின் மீது தனக்கு உரிமை இருக்கிறது. அது தன்னுடைய ஏவல் நிகழ்ச்சி என்று நினைத்துக் கொண்டதில், ஒரு தெம்பும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/164&oldid=1405201" இலிருந்து மீள்விக்கப்பட்டது