பக்கம்:பாலைப்புறா.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 பாலைப்புறா

கேட்கல... எப்படிப்போவேன்... எப்படிடா போவேன். எம்மா... என்னப் பெத்த அம்மா, நீ அழுதழுது கூப்பிட்டபோதே தான் வந்திருக்கலாமோ... எப்படிம்மா முடியும்? பலராமன் பார்வை சரியில்லியே... அம்மா! நீங்க என்னை பிறக்கும் போதே கொன்னுருக்கலாமே... அம்மா... உசிலம்பட்டியிலே பிறக்காமப் போயிட்டனே... அப்பா... என்ன பெத்த

soft/Liss...”

கலைவாணிக்கு, இயற்கை கனிந்தது. தற்செயலாய் கனிந்தது...துக்கச் சுமையே மாத்திரையானது; எறும்புகள் கடித்தன. கொசுக்கள் அரித்தன... பூச்சிகள் அவள்மேல் புரண்டன. ஆனாலும் தூங்கிப் போனாள். அப்படியே தூங்கிப் போனாள்...

ஒரிரு மணி நேரத்திற்கு பிறகு, கலைவாணிக்கு, இயற்கை இப்போது காய்விட்டது... மூளை உசுப்பிவிட்டது. விழித்த கண்களில் கற்கள், கல்லறை கட்டுவதற்கு உள்ளது போன்ற கற்கள்; எவரையோ, ரத்தமும் கூழுமாய் வெட்டிப் போட்டது... போன்ற மண் கட்டிகள்;. நீரோடு குழைந்த மண் சதைகள்; மனக்குகை போல், மருண்டு பார்த்த அடிவாரம்... அவளுக்கு பயமெடுத்தது... தனிமைப்பயம்... மனித முகங்களைப் பார்க்காவிட்டால், மரித்துப் போகலாம் என்ற பயம்...

கலைவாணி, ஈரப் புடவையோடு மேலே வந்தாள். முதுகிலும் தோளிலும் அப்பிய சேறோடு வெளியேறினாள். மனம் போன போக்கில் நினைத்து, கால்போன போக்கில் நடந்து, சாலையோரமாய் உள்ள ஒரு ஆலமரத்தின் அடிவாரத்துக்கு வந்தாள். அதன் விழுதுகளில் இரண்டை பிடித்தபடி நின்றாள். அப்படியே, அந்த மரத்தின் தூரில் சாய்ந்தாள். உடல் மரத்துப் போனது... மனம் அற்றுப் போனது. நினைவற்ற சூனியம். ஏகாந்தத்தின் எதிர்நிலை...

அந்த உச்சி வெயிலில் புலிப்பாய்ச்சலில் ஒடிக் கொண்டிருந்த லாரிகள், அவளைப் பார்த்து பம்மி பம்மி, தத்தித் தத்திப் போயின... இரு சக்கர வாகனங்கள் ஆங்காங்கே ரிப்பேராய் நின்றன. ஆனால், இவள் சட்டை செய்யாததால், காலவிரயத்தை ஈடுகட்டும் வகையில் மீண்டும் ஓடின. முன் பக்கமும், பின் பக்கமும் நரிகள் வாழும் கருவேலமரக் காடுகள், எதிரே தெரிந்த எருக்கலைக்ச்செடிகள்.காற்றிலாடி அவளைக் கூப்பிட்டன. கருவேல மரங்கள், அவளைப் பார்த்து முட்கரங்களை ஆட்டின. இடிபட்ட பனை ஒன்று, அவளைப் போல் மொட்டையாய் நின்று மொக்கை வாயால் புலம்பியது. காக்காவால் கடிபட்ட அணில் ஒன்று, மூக்கில் ரத்தம் சொட்ட அரற்றி அரற்றி, அவள் காலடிப் பக்கமாய்த்தாவியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/238&oldid=635683" இலிருந்து மீள்விக்கப்பட்டது