பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

திருக்குறள்

தமிழ் மரபுரை


மகனைச் செல்வனாக்குவதிலுங் கல்விமானாக்குவது சிறந்தது என்பது கருத்து. "சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே" என்றார் பொன்முடி யாரும் (புறம்.312).

68.

தம்மிற்றம் மக்க ளறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லா மினிது.

(இ-ரை.) தம்மின் - தம்மினும் மிகுதியாக: தம் மக்கள் அறிவுடைமை தம் மக்கள் கல்வியறிவுடையரா யிருத்தல்; மாநிலத்து மன் உயிர்க்கு எல்லாம் இனிது பெற்றோராகிய தமக்கு மட்டுமன்றி இம் மண்ணுலகத்துள்ள மற்றெல்லா மக்கட்கும் இன்பந் தருவதாம்.

மன் = மாந்தன் (OE., OS., OHG. man, Skt. மநு). மன்பதை = மக்கட் கூட்டம். மன்னுயிர் என்பது இருபெயரொட்டு. மக்கள் கல்வியறிவில் அவையோரின் மட்டுமன்றிப் பெற்றோரினும் விஞ்சியிருக்கலாமென்பது கருத்து. தந்தையும் கற்றோனாகவும் அவையத்து முந்தியிருப்பவனாகவு மிருக்கலா மாதலால், "தந்தையினும் அவையத்தா ருவப்பர்" என்று பரிமேலழகர் கூறுவது பொருந்தாது.

69.

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்குந் தன்மகனைச்
சான்றோ னெனக்கேட்ட தாய்.

(இ-ரை.) தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் - தன் மகனைக் கல்வியறிவு நிறைந்தோனென்று அறிவுடையோர் சொல்லக் கேட்ட தாய்; ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் - தான் அவனைப் பெற்றெடுத்த பொழுதினும் பெரிது மகிழ்வாள்.

"ஐயிரு திங்களா யங்கமெலா நொந்துபெற்றுப்
பைய லென்ற போதே பரிந்தெடுத்து"

மகிழ்ந்ததினும் சான்றோனெனக் கேட்ட மகிழ்ச்சி சிறந்ததாதலின், 'பெரி துவக்கும்' என்றார். அறிவுடையோர் என்பது அவாய்நிலையான் வருவிக் கப்பட்டது. காமஞ்செப்பாது கண்டது மொழியும் நடுநிலை யுண்மைக் கூற்று அவரதேயாகலின். மனம்மட்டுங் குளிரும் தந்தை மகிழ்ச்சியினும், மனமும் வயிறும் மார்பும் குளிரும் தாய் மகிழ்ச்சி மிகப் பெரிதாகலின் தனித்துக் கூறப்பட்டது.

தமிழ மகளிர்க்கு உயர்நிலைக் கல்வி விலக்கப்படாமையாலும் இருபாலார்க்கும் உரிய பொதுச் செய்திகளையும் தலைமைபற்றி ஆண்பாலின்