பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறத்துப்பால் - இல்லறவியல் - அன்புடைமை

81



"பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தலென்
நாடிழந் ததனினு நனியின் னாதென
வாள்தந் தனனே தலையெனக் கீயத்
தன்னிற் சிறந்தது பிறிதொன் றின்மையின்" (புறம்.145)

என்று அப் புலவர் பாடியதினின்று அறிந்து கொள்க. இனி, பாரி தன்னையும் பரிசிலர்க்குத் தர அணியமாயிருந்ததும் இத்தகைய செயலாம்.

"பறம்பு பாடின ரதுவே யறம்பூண்டு
பாரியும் பரிசில ரிரப்பின்
வாரே னென்னான் அவர்வரை யன்னே" (புறம்.108)

என்று கபிலர் பாடியிருத்தல் காண்க.

73. அன்போ டியைந்த வழக்கென்ப வாருயிர்க்
கென்போ டியைந்த தொடர்பு.

(இ-ரை.) ஆர் உயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு - பெறுதற்கரிய மக்களுயிர்க்கு உடம்போடு பொருந்திய தொடர்பை; அன்போடு இயைந்த வழக்கு என்ப - அன்பு செய்தற்கு ஏற்பட்ட நெறியின் பயன் என்று கூறுவர் அறிவுடையோர்.

வழக்கு என்பது வழங்கும் நெறி. அஃது இங்கு அதன் பயனைக் குறித்தது. 'அன்பு' ஆகுபெயர். அன்பு செய்தலே மக்கட் பிறப்பின் நோக்கமும் பயனும் என்பது இங்குக் கூறப்பட்டது.

74. அன்பீனு மார்வ முடைமை யதுவீனு
நண்பென்னு நாடாச் சிறப்பு.

(இ-ரை.) அன்பு ஆர்வமுடைமை ஈனும் - உறவினரிடத்துச் செய்யும் அன்பு ஒருவனுக்குப் பிறரிடத்தும் விருப்பத்தை உண்டாக்கும்; அது நண்பு என்னும் நாடாச் சிறப்பு ஈனும் - அது நாளடைவில் எல்லாரையும் நட்பாக்கி எல்லாப் பொருள்களும் எளிதாய்க் கிடைக்கக் கூடிய நல்ல நிலைமையை உண்டுபண்ணும்.

நாடாமை வருந்தித் தேடாமை.

75. அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்
தின்புற்றா ரெய்துஞ் சிறப்பு.

(இ-ரை.) வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு - இவ் வுலகத்து இல்லறத்தில் நின்று இன்பம் நுகர்ந்தவர் மறுமையில் தேவருலகஞ் சென்று