பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

திருக்குறள்

தமிழ் மரபுரை


நல்விருந்து - மறுமையில் தேவனாகி விண்ணகத்தாரால் சிறந்த விருந்தினனாக ஏற்றுக்கொள்ளப்படுவான்.

பண்டை வேளாண் மகளிர் தம் பிள்ளைகளை முறையாக விடுத்து வழிப்போக்கரைத் தடுத்துத் தம் வீட்டிற்கு வருவித்து விருந்தோம்பிய செய்தியை,

"உரன்கெழு நோன்பகட் டுழவர் தங்கை
பிடிக்கை யன்ன பின்னுவீழ் சிறுபுறத்துத்
தொடிக்கை மகடூஉ மகமுறை தடுப்ப
இருங்கா ழுலக்கை யிரும்புமுகந் தேய்த்த
அவைப்புமா ணரிசி யமலைவெண் சோறு
கவைத்தா ளலவன் கலவையொடு பெறுகுவிர்" (190-5)

என்னும் சிறுபாணாற்றுப்படைப் பகுதியால் அறிக.

87.இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
றுணைத்துணை வேள்விப் பயன்.

(இ-ரை.) வேள்விப்பயன் இனைத்துணைத்து என்பது ஒன்று இல்லை - விருந்தினர்க்குணவு படைத்தலின் பயன் இவ்வளவினது என்று வரையறுத்துச் சொல்லுந் திறத்த தன்று; விருந்தின் துணைத்துணை - விருந்தினரின் தகுதியளவே அதன் அளவாம்.

வேட்டுச் செய்யும் வினையாகலின் விருந்தோம்பலை வேள்வி என்றார். வேட்டல் விரும்பல்.

உறக்குந் துணையதோ ராலம்வித் தீண்டி யிறப்ப நிழற்பயந் தாஅங் - கறப்பயனும் தான்சிறி தாயினுந் தக்கார்கைப் பட்டக்கால் வான்சிறிதாப் போர்த்து விடும்" (38)

என்பது நாலடியார்.

88.பரிந்தோம்பிப் பற்றற்றே மென்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.