பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/121

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அறத்துப்பால் - இல்லறவியல் - நடுவுநிலைமை

99



நடுநிலை திறம்பக் கூடாதென்பதற்கு இது செய்ந்நன்றியறிதலின் பின் வைக்கப்பட்டது.

நடுநிலை என்னும் சொல், சமன் செய்து சீர்தூக்குந் துலைக்கோலில் நடுநின்று ஒருபாற் கோடாத நாவின் நிலைமையினின்று எழுந்தது.

111. தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற் பாற்பட் டொழுகப் பெறின்.

(இ-ரை.) பகுதியான் பாற்பட்டு ஒழுகப் பெறின் - பகை நட்பு நொதுமல் என்னும் முத்திறத்தும் முறைமை தவறாது ஒழுகப் பெறின்; தகுதி என ஒன்றே நன்று - நேர்மை என்று சொல்லப்படும் ஓர் அறமே நல்லதாம்.

தகுதி என்ற சொல்லால் இங்குக் குறிக்கப்பட்டது நடுவுநிலை. தமிழரின் ஏமாளித்தனத்தினால் 'யோக்கியதை' என்னும் வடசொல் வழக்கூன்றவே தகுதி என்னும் தகுந்த தமிழ்ச்சொல் வழக்கு வீழ்ந்தது. ஏகாரம் பிரித்துக் கூட்டப்பட்டது. 'பகுதியான்' என்பது பகுதிதொறும் என்று பொருள்படுதலால், ஆனுருபு உடனிகழ்ச்சிப் பொருளது. 'பெறின்' என்பது அவ் வொழுக்கத்தின் அருமை தோன்ற நின்றது.

112. செப்ப முடையவ னாக்கஞ் சிதைவின்றி யெச்சத்திற் கேமாப் புடைத்து.

(இ-ரை.) செப்பம் உடையவன் ஆக்கம் - நடுவுநிலைமை யுடையவனது செல்வம்; சிதைவு இன்றி எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து - பிறர் செல்வம் போல் அழியாது அவன் வழியினர்க்கும் வலிமையாதலை யுடையது. வலிமை பாதுகாப்பு. எச்சவும்மை தொக்கது. ஒருவனுக்குப் பின் எஞ்சி நிற்பதாகலின் வழிமரபு எச்சமெனப்பட்டது.

113. நன்றே தரினு நடுவிகந்தா மாக்கத்தை யன்றே யொழிய விடல்.

(இ-ரை.) நன்றே தரினும் - அறவழியில் வந்த செல்வம்போல் நன்மையே விளைப்பினும்; நடுவு இகந்து ஆம் ஆக்கத்தை அன்றே ஒழிய விடல் நடுவுநிலை திறம்புவதால் வரும் செல்வத்தை அப்பொழுதே விட்டுவிடுக.