பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/123

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அறத்துப்பால் - இல்லறவியல் - நடுவுநிலைமை

101



என்பது அறிக - அக் கருத்தையே தன் கேட்டை முன்னறிவிக்குந் தீக்குறியாகக் கொண்டு, "நான் இனிக் கேடடைவேன்" என்று திட்டமாய் அறிந்து கொள்க.

கருதுதல் மனத்தின் செயலாதலின் 'செயின்' என்றார். ஒருவி என்பது ஒரீஇ என அளபெடுத்தது சொல்லிசை யளபெடை. நெஞ்சார நடுநிலை திறம்புவார்க்கு எச்சரிக்கை இக் குறளாற் கூறப்பட்டது.

117. கெடுவாக வையா துலக நடுவாக
நன்றிக்கட் டங்கியான் றாழ்வு.

(இ-ரை.) நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு - நடுநிலை நின்று அறத்தின்கண் தங்கினவனது வறுமையை; உலகம் கெடுவாக வையாது - உயர்ந்தோர் கேடாகக் கருதார்.

'கெடு' என்பது முதனிலைத் தொழிற்பெயர். உலகம் என்பது உயாந்தோர் மேற்றே."உலகம் புகழ்ந்த வோங்குயர் விழுச்சீர் (திருமுருகு.124) கெடுவாக வையாது எனவே, செல்வமாகக் கொள்ளும் என்பது கருத்து.

"ஒப்புரவி னால்வருங் கேடெனி னஃதொருவன்

விற்றுக்கோட் டக்க துடைத்து"
(220)

என்பதால், அறத்தினால் வருங் கேடெல்லாம் விரும்பத்தக்கது என்பதே அறிஞர் கொள்கை.

118. சமன்செய்து சீர்தூக்குங் கோல்போ லமைந்தொருபாற்
கோடாமை சான்றோர்க் கணி.

(இ-ரை.) சமன் செய்து சீர்தூக்கும் கோல்போல் - இயல்பாகச் சமனாக நின்று தன்கண் வைத்த பொருளின் நிறையை வரையறுத்துக் காட்டும் துலாக்கோல் போல; அமைந்து ஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி- மனத்திற் சமநிலையாக விருந்து ஒரு பக்கஞ் சாயாது உண்மை யுரைத்தல் அறிவு நிறைந்தோர்க்கு அழகாம்.

சமன் செய்தலும் சீர் தூக்கலும் ஆகிய உவம வடைகள், முறையே, அமைதலும் ஒருபாற் கோடாமையும் ஆகிய பொருளடைகளை ஒப்பனவாம். ஒருபாற் கோடாமையாவது, துலாக்கோல் சீர்தூக்கிப் பொருள்களின் நிறையை உள்ளவாறு காட்டுதல்போல, முத்திறத்தாரிடத்தும் ஒத்து நின்று