பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/124

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

102

திருக்குறள்

தமிழ் மரபுரை



ஆய்ந்து கண்ட உண்மையை உள்ளவாறுரைத்தல். இங்குக் கோடாமை என்றது கோடாதிருந்து உண்மையுரைத்தலை. ஆகவே, ஒருபாற் கோடாமையுள்ளேயே ஆய்ந்துண்மை காண்டலும் அடங்கிற்றென அறிக. இது 'கவர்ந்தற்று' என்றது கவர்ந்துண்டலைக் குறித்தது போன்றதாம்.

119. சொற்கோட்ட மில்லது செப்ப மொருதலையா
வுட்கோட்ட மின்மை பெறின்.

(இ-ரை.) செப்பம் சொல் கோட்டம் இல்லது - நடுவுநிலைமையாவது ஆய்ந்து கூறும் தீர்ப்பின்கண் சிறிதும் சொற்கோடுதல் இல்லதாம்; உள்கோட்டம் இன்மை ஒருதலையாப் பெறின் - அது அங்ஙனம் நிகழ்வது மனத்தின்கண் கோட்டமின்மையை முழுவுறுதியாகப் பெற்றவிடத்தே.

மனம் வாய் மெய் என்னும் முக்கரணங்களுள் மனமே ஏனை யிரண்டிற்கும் மூலமாதலாலும், மனத்துக்கண் மாசிலனாதலே அறமாதலாலும், சொற்கோட்ட மில்லா நடுவுநிலைக்கு உட்கோட்டமின்மை இன்றியமையாததென்றார். ஆயினும், கண்ணன்ன கேளிருக்கும் பெருநன்றி செய்தவர்க்கும் செல்வத்தாலும் அதிகாரத்தாலும் ஆட்டுணையாலும் வலியவர்க்கும் கருதியது செய்து முடிக்கும் கயவருக்கும் மாறாக, உயிர்நாடிச் செய்திகளில் உண்மை கூறுவதற்குத் தெய்வத் தன்மையான மனச்சான்றும் இறுதிவரினும் அஞ்சாத் தறுகண்மையும் வேண்டியிருத்தலின், அவை யிரண்டும் அமையும் அருமை நோக்கி, 'உட்கோட்ட மின்மை பெறின்' என்றார்.

120. வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவுந் தமபோற் செயின்.

(இ-ரை.) பிறவும் தமபோல் பேணிச் செயின் - பிறர் பொருளையுந் தம் பொருள்போலப் பேணிச் செய்யின்; வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் - வாணிகஞ் செய்வார்க்கு நடுநிலையான நல்வாணிகமாம்.

"கொடுமேழி நசையுழவர்
நெடுநுகத்துப் பகல்போல
நடுவுநின்ற நன்னெஞ்சினோர்
வடுவஞ்சி வாய்மொழிந்து
தமவும் பிறவு மொப்ப நாடிக்
கொள்வதூஉ மிகைகொளாது
கொடுப்பதூஉங் குறைகொடாது
பல்பண்டம் பகர்ந்து வீசும்"

(பட்டினப். 205-11)