பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/125

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அறத்துப்பால் - இல்லறவியல் - அடக்கமுடைமை

103



வாணிகம் கொள்வனையையும் விற்பனையையும் ஒப்பக் கருதுவதனாலும், பொய்க்குங் கொள்ளைக்கும் இடந்தராமையாலும், மொத்த வணிகர் சில்லறை வணிகர் கொள்வோர் ஆகிய முத்திறத்தார்க்கும் தீதுங் கேடு மில்லா நல்வாணிகமாம்.

அதி. 13- அடக்கமுடைமை

அதாவது, செருக்கின்றியும் வரம்பிறந்தொழுகாதும் முக்கரணத்தாலும் அடங்கிநடத்தல். இது தன்னுயிர்போல் மன்னுயிரைக் கருதும் நடுநிலை மனப்பான்மை வழியதாகலின், நடுவுநிலைமையின் பின் வைக்கப்பட்டது.

121. அடக்க மமரரு ளுய்க்கும் மடங்காமை
யாரிரு ளுய்த்து விடும்.

(இ-ரை.) அடக்கம் அமரருள் உய்க்கும் - அடக்கமாகிய நன்று ஒருவனைத் தேவருலகத்திற் கொண்டுபோய்ச் சேர்க்கும்; அடங்காமை ஆர் இருள் உய்த்துவிடும் - அடங்காமையாகிய தீது ஒருவனைத் தங்குதற்கரிய இருளுலகத்திற்குச் செலுத்திவிடும்.

இருள் என்றது இருளுலகத்தை. இருளுலகமாவது நரகம். “இருளுல கஞ் சேராத வாறு" என்று நல்லாதனார் (திரிகடு. 60) கூறுதல் காண்க. பண்டைக் காலத்தில் இருட்டறையுள் அடைப்பதும் ஒருவகைத் தண்டனையா யிருந்தமையின், நரகம் இருளுலகம் எனப்பட்டது. ஆர் இருள் என்பது திணிந்த இருள் என்றுமாம். விடு என்பது விரைவும் நிறைவும் உணர்த்தும் துணை வினைச்சொல்.

122. காக்க பொருளா வடக்கத்தை யாக்க
மதனினூஉங் கில்லை யுயிர்க்கு.

(இ-ரை.) அடக்கத்தைப் பொருளாக் காக்க - அடக்கமுடைமையை ஒரு செல்வமாகப் பேணிக் காக்க; உயிர்க்கு அதனின் ஊங்கு ஆக்கம் இல்லை - மக்கட்கு அதனினுஞ் சிறந்த ஆக்கந் தருவது வேறொன்று மில்லை.

உயிர் என்பது வகுப்பொருமை. அது இங்கு மக்களுயிரைக் குறித்தது; அடக்கமுடைமையாகிய அறத்தை மேற்கொள்வது அதுவே யாகலின். அறிவற்றதும் பிறவிதொறும் நீங்குவதுமான உடம்பை இயக்குவதும் இன்ப துன்பங்களைத் துய்ப்பதும் உயிரேயாதலின். 'உயிர்க்கு' என்றார்.