பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/129

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அறத்துப்பால் - இல்லறவியல் - அடக்கமுடைமை

107


128. ஒன்றானுந் தீச்சொற் பொருட்பய னுண்டாயி னன்றாகா தாகி விடும்.

(இ-ரை.) தீச்சொற் பொருட்பயன் ஒன்றானும் உண்டாயின் ...வன் கூறும் தீய சொற்களின் பொருளால் விளையும் துன்பம் ஒன்றேனும் பிறர்க்கு உண்டாயின்; நன்று ஆகாது ஆகிவிடும் - அவன் ஏற்கெனவே செய்துள்ள பிறவறங்கள் பயன்படாமற்போம்.

சொற்குற்றம் பொய், குறளை, கடுஞ்சொல், பயனில்சொல் என நான்கு என்பர்.

"ஒரு சொல்லே யாயினும் கேட்டார்க்கு இனிதாயிருந்து தீய சொல்லின் பொருளைப் பயக்குமாயின், நன்மை யாகாதாகியேவிடும்" என்னும் மணக்குடவருரை பொருந்துவதன்று.

129. தீயினால் சுட்டபு ணுள்ளாறு மாறாதே நாவினாற் சுட்ட வடு. (இ-ரை.) தீயினால் சுட்ட புண் உள் ஆறும் - ஒருவன் ஒருவனை நெருப்பினாற் சுட்ட புண் காட்சிப் பொருளாகிய ஒருவன் உடம்பையே சுட்டதினால், அப்பொழுதேயோ அப் புண் ஆறின பின்போ உள்ளத்தில் ஆறிவிடும்; நாவினால் சுட்ட வடு ஆறாது - ஆயின், நாவினால் சுட்ட புண்ணோ, கருத்துப் பொருளாகிய உள்ளத்தைச் சுட்டதினால், ஒருகாலும் ஆறாது அதன்கண்ணே நிற்கும்.

தீயினாற் சுட்ட புண் ஆறிப்போதலால் அதைப் புண் என்றும், நாவினாற் சுட்ட புண் ஆறாது நிற்றலால் அதை வடு என்றும், வெவ்வேறு சொல்லாற் குறித்தார். மருந்தினால் ஆறிவிடுவது புண்; புண் ஆறியபின் என்றும் மாறாது நிற்பது வடுவெனும் தழும்பு. நாவினாற் சுட்டது புண்ணிலைமையும் வடுநிலைமையும் ஒருங்கே கொண்டது என்பதை உணர்த்தச் 'சுட்ட வடு' என்றார். கடுஞ்சொல்லும் பழிச்சொல்லுமாகிய சுடுசொல்லின் தொழில், அதற்குக் கருவியான நாவின்மேல் ஏற்றிக் கூறப்பட்டது. ஏகாரம் தேற்றம்.

இனி, சூடிடுதல் சில நோய்க்கு மருந்துமாகலின், சுடுசொல் இரு வகையில் தீயினுங் கொடியதாம். இருவகைப் புண்ணையும் வேறுபடுத்திக் காட்டியது வேற்றுமையணியாகும்.