பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/133

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அறத்துப்பால் - இல்லறவியல் - பிறனில் விழையுடையாமை

111



139. ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.

(இ-ரை.) வழுக்கியும் தீய வாயால் சொலல் - மறந்தும் தீய சொற்களைத் தம் வாயாற் சொல்லும் சொலவுகள்; ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லா ஒழுக்கமுடைய உயர்ந்தோர்க்கு இயலா. வழுக்குதல் கால்தவறுதல்போல் வாய்தவறுதல்; அதாவது மறத்தல். 'வாயால்' என்று வேண்டாது கூறியது. 'செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்' என்பதிற்போல (91) நல்ல சொற்களே பயின்ற தன்மையை உணர்த்தற்கு. ஏகாரம் தேற்றம். 'சொலல்' பால்பகா வஃறிணைப் பெயர்.

140. உலகத்தோ டொட்ட வொழுகல் பலகற்றுங்
கல்லா ரறிவிலா தார்.

(இ-ரை.) உலகத்தோடு ஒட்ட ஒழுகல் கல்லார் உயர்ந்தோரொடு பொருந்த வொழுகுதலைக் கல்லாதார்; பல கற்றும் அறிவிலாதார் - பல நூல்களைக் கற்றவரேனும் அறிவிலாதாரே.

உலகம் என்றது வரையறைப்பட்ட இடவாகுபெயர். அறநூல்களில் எல்லா வொழுக்க முறைகளும் சொல்லப்படாமையானும், காலந்தோறும் பழையன கழிதலும் புதியன புகுதலும் நிகழ்தலானும், ஒழுக்க வகையில் உயர்ந்தோரைப் பின்பற்றுதல் இன்றியமையாததாயிற்று. கல்வியால் அறிவும் அறிவால் ஒழுக்கமும் பயனாதலின், உயர்ந்தோரொடு பொருந்த வொழு கலைக் கல்லாதார் பல நூல்களைக் கற்றும் அறிவில்லாதவரே யாவர். ஒழுகுதலைக் கற்றலாவது பின்பற்றியொழுகுதல்.

அதி. 15 - பிறனில் விழையாமை

அதாவது, காமமயக்கத்தாலும், அழகுள்ள பெண்டிர் பலரொடு கூடி இன்பம் நுகரவேண்டுமென்னும் ஆசையாலும், பிறன் மனைவியை விரும்பாமை. இஃது ஒழுக்கத்திற் சிறந்தாரிடத்திலேயே நிகழ்வதாகலின், ஒழுக்கமுடைமையின் பின் வைக்கப்பட்டது.

141. பிறன்பொருளாட் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்
தறம்பொருள் கண்டார்க ணில்.