பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/134

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

112

திருக்குறள்

தமிழ் மரபுரை



(இ-ரை.) பிறன் பொருளாள் பெட்டு ஒழுகும் பேதைமை - வேறொருவன் உடைமையாக வுள்ளவளைக் காதலித் தொழுகும் மடமை; ஞாலத்து அறம்பொருள் கண்டார்கண் இல் - நிலவுலகத்தில் அறநூலையும், பொருள் நூலையுங் கற்றுத் தெளிந்தவரிடம் இல்லை.

பிறன் மனைவியைக் காதலிப்பவர், இம்மைக்குரியனவும் மாந்தனுக்கு உறுதி பயப்பனவுமான அறம்பொரு ளின்பம் என்னும் மூன்றனுள் இன்பம் ஒன்றையே கருதியவர் என்பதை உணர்த்தற்கு, 'அறம்பொருள் கண்டார்கணில்' என்றார்.

பொருள்நூலை அறியாததினால் பிறன் மனைவி பிறன் பொருளென்பதும், அறநூலை யறியாததினால் பிறன் பொருளை நுகர்தல் தீவினையென்பதும், தெரியாதுபோயின. அறம் பொருள் என்பன கருமிய (காரிய) வாகுபெயர். எண்ணும்மை தொக்கது. பூமி என்னும் வடசொல் வழங்கவே. ஞாலம் என்னும் தென்சொல் வழக்கற்றது. பேதைமை என்பது நல்லதை விட்டுவிட்டுத் தீயதைத் தெரிந்துகொள்ளுந் தன்மை.

142. அறன்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடை
நின்றாரிற் பேதையா ரில்.

(இ-ரை.) அறன்கடை நின்றாருள் எல்லாம் - காமம்பற்றித் தீவினை செய்தா ரெல்லாருள்ளும்; பிறன்கடை நின்றாரின் பேதையார் இல் - பிறன் மனைவியைக் காதலித்து அவன் வீட்டு வாயிற்கண் போய் நின்றாரைப் போலப் பேதையா ரில்லை.

அறத்தின் எல்லைக்கு அப்பாற்பட்ட தென்னுங் கருத்தால் கரிசு (பாவம்) அறங்கடை எனப்பட்டது. காமத்தாற் பெண்ணிற் கடிமையாகும் அண்ணாளரும் விலைமகளிரொடு கூடும் காமுகரும் போல, அறமும் பொருளும் இழத்தலேயன்றி, அச்சத்தால் தாம் விரும்பிய இன்பமும் இழத்தலால், பிறன் மனைவியை விரும்புவாரைப் போலப் பேதையா ரில்லை என்றார். கடை என்னும் சொல்லொப்புமைபற்றித் தீவினையில் நிலைத்தவரையும் 'நின்றார்' என்றார். பிறன் கடைநிற்றல் என்பது இரப்போன் நிலை போன்ற இழிவையும் உணர்த்திற்று.

143.விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரிற்
றீமை புரிந்தொழுகு வார்.