பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறத்துப்பால் - இல்லறவியல் - அழுக்காறாமை

121



(இ-ரை.) அழுக்காற்றின் அல்லவை செய்யார் - அறிவுடையோர் பொறாமை கொண்டு அதனால் அறனல்லாதவற்றைச் செய்யார்; இழுக்கு ஆற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து - அத் தீய நெறியால் தமக்கு இருமை யிலுங் கேடு வருதலை யறிந்து. அல்லவை செய்தலாவது, கல்வி செல்வம் அதிகாரம் ஆற்றல் முதலி யன வுடையார்க்குத் தீங்கு எண்ணுதலும் சொல்லுதலும் செய்தலுமாம். 'பாக்கு ஒரு தொழிற்பெயரீறு.

165. அழுக்கா றுடையார்க் கதுசாலு மொன்னார்
வழுக்கியுங் கேடீன் பது.

(இ-ரை.) ஒன்னார் வழுக்கியும் கேடு ஈன்பது - பகைவர் கேடு செய்யத் தவறினும் பொறாமை தப்பாது கேடு செய்வதாதலின்; அழுக்காறு உடையார்க்கு அது சாலும் - பொறாமையுள்ளவர்க்குக் கேடு செய்ய அது ஒன்றே போதுமானது; வேறு பகை வேண்டுவதில்லை.

உம்மை எதிர்மறைப் பொருட்டு. அதுவே என்னும் பிரிநிலை யேகாரம் தொக்கது.

166.கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்ற முடுப்பதூஉ
முண்பதூஉ மின்றிக் கெடும்.

(இ-ரை.) கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் - ஒருவன் பிறர்க்குக் கொடுப்பதைப் பொறாமையால் தடுப்பவன் மட்டுமன்றி அவன் உறவினரும்; உண்பதும் உடுப்பதும் இன்றிக் கெடும் - உண்ணும் பொருளும் உடுக் கும் பொருளுமின்றிக் கெடுவர்.

சுற்றமும் என்னும் எச்சவும்மை தொக்கது. ஒரு செல்வனது பொருளைக் கண்டு பொறாமைப்படுவதினும் ஒரு செல்வன் ஓர் ஏழைக்குக் கொடுப்பதைப் பொறாமையால் தடுப்பது மிகக் கொடியதாதலின், அக் கொடுமை செய்தவன் தன் சுற்றத்தோடும் உண்பதும் உடுப்பதுமின்றிக் கெடுவான் என்றார். இவ் விளைவு பொறாமைக் குற்றத்தோடு ஏழை வயிற்றெரிச்சலும் கூடுவதால் நேர்வது. ஊணுடை யென்னாது உண்பது முடுப்பதும் என்றமையால், உண்ணத்தக்கனவும் உடுக்கத்தக்கனவுமான எவ்வகைப் பொருளையு மிழப்பர் என்பது பெறப்படும். 'சுற்றம்' தொழிலாகு பெயர். சுற்றியிருக்கும் இனம் சுற்றம். அளபெடை ஈரிடத்தும் இன்னிசை பற்றியது.