பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

திருக்குறள்

தமிழ் மரபுரை




அறவழியில் ஈட்டப்பட்டு நல்வழியிற் செலவிடப்பெறும் செல்வத்தை 'நன்பொருள்' என்றார். பொன்றி என்பது பொன்றியபின் என்னும் பொருளது.

172. படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.

(இ-ரை.) நடுவு அன்மை நாணுபவர் - நடுவுநிலையன்மைக்கு அஞ்சி நாணுபவர்: படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் - பிறர் பொருளைக் கவர்வதனால் தமக்குண்டாகும் பயனை விரும்பிப் பழிக்கத்தக்க செயல்களைச் செய்யார்.

'நடுவு தமவும் பிறவும் ஒப்ப நாடிப் பிறவுந் தமபோற் பேணுதல்.

173. சிற்றின்பம் வெஃகி யறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.


(இ-ரை.) சிற்றின்பம் வெஃகி அறன் அல்ல செய்யார் - பிறர் பொரு ளைக் கவர்வதால் தாம் அடையும் நிலையில்லாத சிற்றளவான தீய இன்பத்தை விரும்பி அறனல்லாத செயல்களைச் செய்யார்; மற்றின்பம் வேண்டு பவர் - அறத்தால் வருவதும் நிலையானதும் பேரளவினதுமான வேறு நல்லின்பத்தை வேண்டும் அறிவுடையோர்.

இன்பத்தின் சிறுமை காலமும் அளவும் தீமையும்பற்றியது. மற்று வேறு. ஏகாரம் தேற்றம்.

174. இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்.

(இ-ரை.) புலம் வென்ற புன்மை இல் காட்சியவர் ஐம்புலன்களையும் அடக்கிய குற்றமற்ற அறிவினையுடையோர்; இலம் என்று வெஃகுதல் செய்யார்- -யாம் பொருளிலேம் என்று எண்ணி அவ் வின்மையைத் தீர்த்தற் பொருட்டுப் பிறர்பொருளை விரும்புதல் செய்யார்.

புலம் வெல்லுதல் தீய வழியில் இன்புறாது மனத்தைத் தடுத்தல், 'புன்மையில் காட்சி' ஐயந்திரிபறப் பொருள்களை யறிதல், அதாவது, பிறர் பொருள்மீது தமக்குரிமையில்லையென்றும். அதைக் கவரின் அது நிலை யாதாகையாற் பின்னும் வறுமையுண்டாகுமென்றும்; ஆகவே, அக் கவர்வால் இருமையிலுந் துன்பமன்றி யின்பமில்லை யென்றும் உணர்தல்.