பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறத்துப்பால் - இல்லறவியல் - வெஃகாமை

125



175. அஃகி யகன்ற வறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்.

(இ-ரை.) அஃகி அகன்ற அறிவு என்ஆம் - உணர்வால் நுணுகிப் பொருளாற் பரந்த ஒருவரது கல்வியறிவால் என்ன பயனாகும்: வெஃகி யார்மாட்டும் வெறிய செயின் - அவர் பிறர் பொருளை விரும்பி எல்லாரிடத்தும் தம் அறிவொடு பொருந்தாத செயல்களைச் செய்வாராயின்.

யார் மாட்டும் வெறிய செய்தலாவது, நல்லார் பொல்லார், சிறியார் பெரியார், இளையார் மூத்தார், ஆடவர் பெண்டிர், நல்லவர் பிணியர் என்னும் வேறுபாடின்றி, இழிந்தனவுங் கடியனவுஞ் செய்தல். வெறுமை அறிவென்னும் உள்ளீடின்மை. அறிவாற் பயனின்மையின் 'என்னாம்' என்றார்.

176. அருள்வெஃகி யாற்றின்க ணின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்.

(இ-ரை.) அருள் வெஃகி ஆற்றின்கண் நின்றான் - அன்பைமட்டு மன்றி அருளையும் விரும்பி இல்லறத்தின்கண் நின்றவன்; பொருள் வெஃகிப் பொல்லாத சூழக் கெடும் - பிறர் பொருளை விரும்பி அதைக் கைப்பற்றத் தீய வழிகளை ஆராய்ந்தெண்ணிய மட்டிற் கெட்டுவிடுவான்.

விருந்தோம்பல் ஒப்புரவொழுகல் ஈகை ஆகிய அறங்கட்கு அன்பும். இரப்போர்க் கீதற்கு அருளும் வேண்டியிருப்பதால், இல்லறமும் ஓரளவு அருள்நெறிப்பட்டதாம், ஆதலால், இல்லறத்தைத் துறவறத்திற்கு ஆறென்று பரிமேலழகர் கூறியது முழுதும் பொருந்தாது. சூழ்வு வெளிப்பட்டவுடன் பொருளையிழக்க விருந்தாரால் தீங்கு நேர்தலின், 'சூழக் கெடும்' என்றார்.

177. வேண்டற்க வெஃகியா மாக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்.

(இ-ரை.) வெஃகி ஆம் ஆக்கம் வேண்டற்க - பிறர் பொருளைக் கவர்தலால் உண்டாகும் ஆக்கத்தை விரும்பற்க; விளைவயின் பயன் மாண்டற்கு அரிது ஆம் - பின்பு நுகருங் காலத்தில் அவ் வாக்கத்தின் பயன் நன்றாதலில்லையாதலின்.

'விளைவயின்' வினைத்தொகை. அருமை இங்கு இன்மை மேற்று.