பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

திருக்குறள்

தமிழ் மரபுரை




178. அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.

(இ-ரை.) செல்வத்திற்கு அஃகாமை யாது எனின் - ஒருவனது செல்வம் சுருங்காமலிருப்பதற்கு வழி எதுவெனின்; பிறன் வேண்டும் கைப்பொருள் வெஃகாமை - அது பிறனுக்குத் தேவையான அவனது கைப்பொருளைத் தான் விரும்பாமையாம்.

அஃகாமை இங்கு ஆகுபொருளது.

179. அறனறிந்து வெஃகா வறியுடையார்ச் சேருந்
திறனறிந் தாங்கே திரு.

(இ-ரை.) அறன் அறிந்து வெஃகா அறிவு உடையார் - இது அறமென்று தெளிந்து பிறர்பொருளை விரும்பாத அறிவுடையாரிடத்து; திரு திறன் அறிந்து ஆங்கே சேரும் - திருமகள் தான் அடைதற்கான திறங்களை யறிந்து அவற்றின்படியே சென்றடைவாள்.

'திரு' ஆகுபெயர். திறங்கள் காலமும் இடமும் வினையும். பிறன் பொருளை விரும்பாமையாற் செல்வம் சுருங்காதிருப்பதோடு புதிதாகத் தோன்றவுஞ் செய்யும் என்பது இதனாற் கூறப்பட்டது.

180. இறலீனு மெண்ணாது வெஃகின் விறலீனும்
வேண்டாமை யென்னுஞ் செருக்கு.

(இ-ரை.) எண்ணாது வெஃகின் இறல் ஈனும் - பின் விளைவதை எண்ணிப்பாராது. ஒருவன் பிறன் பொருளைக் கைப்பற்றக் கருதின், அக் கருத்து அவனுக்கு முடிவைத் தரும்; வேண்டாமை என்னும் செருக்கு விறல் ஈனும் - பிறன் பொருளை விரும்பாமை யென்னும் பெருமிதம் ஒருவனுக்கு வெற்றியைத் தரும்.

முடிவு பொருளிழந்தாராலும் அரசனாலும் நேர்வது. "கள்வனைக் கோறல் கடுங்கோ லன்று" என்று ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் கூறியமை காண்க (சிலப். 20: 94). வெற்றி வெஃகுவார் எல்லார்மீதும் ஆசை மீதுங் கொண்டது.