பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

திருக்குறள்

தமிழ் மரபுரை


அறனழித்தலினும் புறனழித்தலும், அல்லவை செய்தலினும் பொய்த்து நகையும் தீதென நிரனிறையாகக் கொள்க. பழித்துரையால் அழித்தலாவது பெயரைக் கெடுத்தல். 'அழீஇ' ஈரிடத்தும் பிறவினைப் பொருளில் வந்த சொல்லிசை யளபெடை.

183. புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாத லறங்கூறு மாக்கந் தரும்.

(இ-ரை.) புறங்கூறிப் பொய்த்து உயிர் வாழ்தலின் - ஒருவன் பிறனைக் காணாவிடத்துத் தீதாகக் கூறி அவனைக் கண்டவிடத்து நல்லவனாக நடித்து உயிர் வாழ்தலினும்; சாதல் அறம் கூறும் ஆக்கம் தரும் - அங்ஙனஞ் செய்யாது இறந்து போதல் அவனுக்கு அறநூல்கள் கூறும் ஆக்கத்தைத் தரும்.

இறந்தவழிப் புறங்கூறலின்மையால், 'அறங் கூறும் ஆக்கந் தரும்' என்றார். ஆக்கம் மறுமையிற் பெறும் நன்மை. 'அறம்' ஆகுபெயர். தரும் என்னும் சொல்,

"தருசொல் வருசொல் ஆயிரு கிளவியும் தன்மை முன்னிலை ஆயீ ரிடத்த' (512)

என்னும் தொல்காப்பிய நூற்பாப்படி தன்மை முன்னிலையில் வராது படர்க் கையில் வந்ததினால், இடவழுவமைதியாம்.

184. கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க முன்னின்று பின்னோக்காச் சொல்.

(இ-ரை.) கண் நின்று கண் அறச் சொல்லினும் - ஒருவனெதிரே நின்று கண்ணோட்டமின்றிக் கடுஞ்சொற்களைச் சொல்லினும்; முன் இன்று பின் நோக்காச் சொல் சொல்லற்க - அவன் எதிரில் இல்லாவிடத்துப் பின் விளையுந் தீமையை நோக்காத புறங்கூற்றுச் சொற்களைச் சொல்லா தொழிக.

'பின்' ஆகுபொருளது. சொல்வான் செயல் சொல்லின்மே லேற்றப்பட்டது. இதில் வந்துள்ளது முரணணி

185.அறஞ்சொல்லு நெஞ்சத்தா னன்மை புறஞ்சொல்லும் புன்மையாற் காணப் படும்.

(இ-ரை.) அறம் சொல்லும் நெஞ்சத்தான் அன்மை - புறங்கூறுவானொருவன் அறம் நல்ல தென்று சொல்லினும், அவன் அதை நெஞ்சாரச்