பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறத்துப்பால் - இல்லறவியல் - புறங்கூறாமை

129



சொல்கின்றானல்லன் என்னும் உண்மை; புறஞ் சொல்லும் புன்மையால் காணப்படும் - அவன் புறஞ்சொல்லுதற்குக் கரணியமான சிறுதன்மையால் அறியப்படும்.

மனந்திருந்தாமையால் அவன் சொல் நம்பப்பெறா தென்பதாம். இனி, அறம் நல்லதென்று ஒருவனது மனச்சான்று ஒப்புக்கொள்ளினும், வழக்கத்தினாலும் விருப்பினாலும் நெஞ்சுரமின்மையாலும் அவன் அதற்கு மாறாக ஒழுகலாமாகலின், 'அறங்கூறும் நெஞ்சத்தானன்மை' என்பதற்கு, அறத்தின் நன்மையைப்பற்றிக் கூறத் தகுதியுள்ள மனத்தானல்லாமை என்று உரைப்பினுமமையும்.

186. பிறன்பழி கூறுவான் றன்பழி யுள்ளுந் திறந்தெரிந்து கூறப் படும்.

(இ-ரை.) பிறன்பழி கூறுவான் - பிறனொருவன் பழியை அவன் புறத்துக் கூறுபவன்; தன் பழியுள்ளும் திறன் தெரிந்து கூறப்படும் - தன் சொந்தப் பழிகளுள்ளும் கடுமையானவை தெரிந்தெடுக்கப்பட்டு அப் பிறனால் தன் எதிரிலேயே கூறப்படுவான்.

புறத்து என்பது அதிகாரத்தால் வந்தது. 'திறன்' வலிமை. அது இங்குத் திறனான பழிகளைக் குறித்தது: ஆதலால் ஆகுபொருளது. திறந்தெரிந்து கூறுவதற்குக் கரணியம் புறங்கூற்றைப்பற்றி அறிவிக்கப்பட்டமை அல்லது கேள்விப்பட்டமை யென்பது, கருதலளவையால் அறியப்படும். செய்யாமற் செய்த புறங்கூற்றிற்குப் பழிவாங்குஞ் செய்கையாதலாலும், திறந்தெரிந்து' என்னுங் குறிப்பினாலும், நேரிற் சொல்லுதலும் உய்த்துணரப்படும்.

187. பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாட றேற்றா தவர்.

(இ-ரை.) நகச் சொல்லி நட்பாடல் தேற்றாதவர் - மகிழுமாறு இனிய சொற்களைச் சொல்லி அயலாரோடும் நட்பாடல் தமக்கு நன்றென்று தெளியாத புறங்கூற்றாளர்; பகச் சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் - பிளவுண்டாகுமாறு புறங்கூறித் தம் உறவினரையும் தம்மைவிட்டுப் பிரியப்பண்ணுவர்.

கேளிரையும் என்னும் சிறப்பும்மை தொக்கது. நட்பாடல் என்னுங் குறிப்பால் அயலாரோடும் என்பது வருவிக்கப்பட்டது. அவ் வும்மை எச்சவும்மை. தம் கேளிர் என்னாது கேளிர் என்றுமட்டுங் குறித்ததினால், பிற