பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

திருக்குறள்

தமிழ் மரபுரை



ரினத்தார்க்குள்ளும் புறங்கூற்றாற் பிரிவினையுண்டாக்குவர் என்பது பெறப்படும். இங்ஙனம் எல்லார்க்கும் பொல்லாதவராவர் என்பது கருத்து. தேறாதவர் என்னும் தன்வினை தேற்றாதவர் என்று பிறவினை வடிவில் நின்றது. "கனவிலுந் தேற்றாதார் மாட்டு" (குறள். 1054) என்புழிப்போல.

188. துன்னியார் குற்றமுந் தூற்று மரபினா ரென்னைகொ லேதிலார் மாட்டு.

(இ-ரை.) துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் - தம் நெருங்கியவுறவினர் குற்றத்தையும் அவர் புறத்துத்தூற்றும் இயல்புடைய வன்னெஞ்சர்; ஏதிலார் மாட்டு என்னை கொல் - அயலார் செய்தியில் எத்தகையவராவார்!

'குற்றமும்' என்பது துன்னியாரை நோக்கிய சிறப்பும்மை. தூற்றுதல் என்பது களத்திற் பொலி தூற்றுதல்போலப் பலருமறியப் பரப்புதல். மிகக் கொடியவராவர் என்பதுபற்றியும் அறியப்படாமைபற்றியும் 'என்னை கொல்' என்றார். 'என்னர் கொல்' என்னும் பாடமும் ஏற்றதே. 'கொல்' ஐயம்.

189. அறனோக்கி யாற்றுங்கொல் வையம் புறனோக்கிப் புன்சொ லுரைப்பான் பொறை.

(இ-ரை.) புறன் நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை - பிறர் இல்லாத சமயம் பார்த்து அவரைப் பழித்துரைக்கும் புறங்கூற்றாளனது உடலைப் பொறுத்தலை; வையம் அறன்நோக்கி ஆற்றுங்கொல் - மாநிலம் தனக்கு அறமென்று கருதிச் செய்யும் போலும்!

தன்னை அகழ்வாரைத் தாங்கும் நிலத்திற்கும் புறங்கூற்றாளன் உடலைச் சுமத்தல் அரிதென்னுங் கருத்தால். 'அறனோக்கி யாற்றுங்கொல்' என்றார். பொறை என்னும் சொல் இங்குச் சுமத்தலும் பொறுத்துக்கொள்ளுதலுமாகிய இரு பொருளையும் ஒருங்கே தழுவியதாம். 'கொல்' ஐயங் கலந்த உய்த்துணர்வு.

190. ஏதிலார் குற்றம்போற் றங்குற்றங் காண்கிற்பின் றீதுண்டோ மன்னு முயிர்க்கு.

(இ-ரை.) ஏதிலார் குற்றம்போல் தம் குற்றம் காண்கிற்பின் - புறங்கூறுவார் தாம் காணும் பிறர் குற்றம்போல் தம் குற்றத்தையுங் காணவல்லராயின்: மன்னும் உயிர்க்குத் தீது உண்டோ-நிலைபெற்ற மக்களுயிர்க்கு வரக்கூடிய துன்பமுண்டோ?