பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறத்துப்பால் - இல்லறவியல் - பயனில சொல்லாமை

133



'சொலின்' என்னும் நிலைப்பாட்டு வினையெச்சம் சொல்லாமையை உணர்த்திற்று.

196. பயனில்சொற் பாராட்டு வானை மகனெனல் மக்கட் பதடி யெனல்.

(இ-ரை.) பயன் இல் சொல் பாராட்டுவானை மகன் எனல் - பயனற்ற சொற்களைப் பலகாலும் விரும்பிச் சொல்பவனை மகன் (மாந்தன்) என்று சொல்லற்க; மக்கட் பதடி எனல் - மக்களுட் பதர் என்று சொல்லுக.

அல் என்னும் வியங்கோளீறு முன்பு எதிர்மறையிலும், பின்பு உடன் பாட்டிலும் வந்தது. பதர் உள்ளீடில்லாத கூலமணி. மக்கட் பதர் அறிவாகிய உள்ளீடற்றவன் அல்லது அற்றவள்.

197. நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர் பயனில சொல்லாமை நன்று.

(இ-ரை.) சான்றோர் நயன் இல சொல்லினும் சொல்லுக - அறிவுடையோர் நேர்மை யில்லாத சொற்களை என்றேனும் தப்பித் தவறிச் சொல்லினும் சொல்லுக; பயன் இல சொல்லாமை நன்று. ஆயின் எக்கரணியத்தை யிட்டும் பயனில்லாத சொற்களைச் சொல்லாதிருத்தலே அவர்க்கு நன்றாம்.

இது நேர்மையில்லாச் சொல்லை நெருக்கடி நிலைமையிற் சொல்ல இசைவளித்ததன்று; நேர்மையில்லாச் சொல்லினும் பயனில்லாச் சொல் தீயதென்பதை உணர்த்துவதேயாம்.

198. அரும்பய னாயு மறிவினார் சொல்லார் பெரும்பய னில்லாத சொல்.

(இ-ரை.) அரும்பயன் ஆயும் அறிவினார் - அறிதற்கரிய பயன்களை ஆராயவல்ல அறிவுடையார்; பெரும்பயன் இல்லாத சொல் சொல்லார் - மிகுந்த பயனில்லாத சொற்களை ஒருபோதும் சொல்லார்.

அறிதற்கரிய பயன்களாவன நாள்கோளியக்கமும் மெய்ப்பொரு ளியலும் வீடுபேறும் முதலியன. பெரும்பயனில்லாத சொல்லைச் சொல் லாரெனவே, சிறு பயன் தரும் சொல்லும் அவர் வாயினின்று வராதென்பது பெறப்படும். இதனால், அரும்பயனாராயும் அறிவினார்க்குச் சிறுபயன் சொல்லும் அறவே விலக்கப்பட்டது.