பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/157

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அறத்துப்பால் - இல்லறவியல் - தீவினையச்சம்

135



தீவினைக்குக் கரணியமான இறுமாப்பு, தீவினை யென்னும் கருமியமாகச் சார்த்திக் கூறப்பட்டது. அஞ்சாமை மனச்சான்றின் மழுக்கத்தாலும் அச்சம் அதன் கூர்மையாலும் ஏற்படுவனவாம்.

202. தீயவே தீய பயத்தலாற் றீயவை தீயினு மஞ்சப் படும்.

(இ-ரை.) தீய தீயவே பயத்தலால் - ஒருவன் தனக்கின்பங் கருதிச் செய்யும் தீவினைகள் இம்மையிலும் மறுமையிலும் துன்பங்களையே தருதலால்; தீயவை தீயினும் அஞ்சப்படும் - அத் தீவினைகள் தீயினும் மிகுதியாக அஞ்சப்படத்தக்கனவாம்.

தீயானது தொட்டவரைச் சுடினும் எரிப்பினும், சமைத்தலும் குளிர் போக்கலும் நோய் நீக்கலும் கொடுவிலங்கு விரட்டலுமாகிய நன்மை களையுஞ் செய்தலாலும்; தீவினையானது செய்த காலத்தில் மட்டுமன்றிப் பின்பு வேறொரு காலத்திலும் வேறோரிடத்திலும் வேறோருடம்பிலும் சென்று சுடுதலாலும் எவ்வகை நன்மையும் செய்யாமையாலும்; 'தீயவை தீயினும் அஞ்சப்படும்' என்றார். தீவினை நன்மை செய்யாமைபற்றியே 'தீயவே' என்னும் பாடம் இங்குக் கொள்ளப்பட்டது.

203. அறிவினு ளெல்லாந் தலையென்ப தீய செறுவார்க்குஞ் செய்யா விடல்.

(இ-ரை.) செறுவார்க்கும் தீய செய்யா விடல் - தம்மைப் பகைப்பவர்க்குந் தீமையானவற்றைச் செய்யாது விடுதலை; அறிவினுள் எல்லாம் தலை என்ப - அறிவுச் செயல்க ளெல்லாவற்றுள்ளும் தலையாயதென்பர் அறிவுடையோர்.

நன்மைக்கு நன்மையும் தீமைக்குத் தீமையுஞ் செய்வதே மக்களியல் பாதலால், தீமைக்கு நன்மை செய்வதை அல்லது தீமை செய்யாமையைச் சிறந்த அறிவுச் செயலென்றார். உம்மை இழிவுசிறப்பு. 'செய்யா' ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம், அறிவினால் ஒழுக்கம் பயனாதலின் ஒழுக்கம் அறிவெனப்பட்டது.

204. மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழி னறஞ்சூழுஞ் சூழ்ந்தவன் கேடு.