பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/158

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

136

திருக்குறள்

தமிழ் மரபுரை



(இ-ரை.) பிறன்கேடு மறந்தும் சூழற்க - ஒருவன் பிறனுக்குக் கேடு செய்யும் வினையை மறந்தும் எண்ணாதிருக்க: சூழின் சூழ்ந்தவன் கேடு அறம் சூழும் -எவனேனும் எண்ணின், எண்ணினவனுக்குக் கேட்டை அறத்தெய்வமே செய்ய எண்ணும்.

தப்பாது பழிக்குப் பழிவாங்க வலிமை மிக்க அறத்தெய்வம் உடனிருத்தலால், ஒருவனுக்குத் தீங்கை எண்ணுதலும் ஆகாது என்பதாம்.

205. இலனென்று தீயவை செய்யற்க செய்யி னிலனாகும் மற்றும் பெயர்த்து.

(இ-ரை.) இலன் என்று தீயவை செய்யற்க - எவனேனும் யான் பொருளில்லாதவன் என்று கருதி அதைப் பெறற்பொருட்டுப் பிறர்க்குத் தீமையான வற்றைச் செய்யாதிருக்க; செய்யின் பெயர்த்தும் இலன் ஆகும் - செய்வானாயின் மீண்டும் வறியனாவான்.

தீவினையான் வந்த பொருளை விரைந்து இழந்துவிடுவானாதலின் மீண்டும் வறியனாவான் என்றார். 'இலன்' இரண்டுள், முன்னது தன்மை யொருமைக் குறிப்பு வினைமுற்று; பின்னது படர்க்கை யாண்பாற் குறிப்பு வினையாலணையும் பெயர். 'மற்று' அசைநிலை. உம்மை பிரித்துக் கூட்டப்பட்டது.

206.தீப்பால தான்பிறர்கட் செய்யற்க நோய்ப்பால தன்னை யடல்வேண்டா தான்.

(இ-ரை.) நோய்ப்பால தன்னை அடல் வேண்டாதான் - துன்புறுத்துந் திறத்தனவாகிய குற்றங்கள் தன்னைப் பின் வந்து வருத்துதலை விரும் பாதவன்; தீப்பால தான் பிறர்கண் செய்யற்க - தீமை செய்யுந் திறத்தனவாகிய வினைகளைத் தான் பிறரிடத்துச் செய்யாதிருக்க.

தன்னலம்பற்றியேனும் பிறர்க்குத் தீமை செய்யாதிருக்க என்றவாறு. 207. எனைப்பகை யுற்றாரு முய்வர் வினைப்பகை வீயாது பின்சென் றடும்.

(இ-ரை.) எனைப் பகை உற்றாரும் உய்வர் - எத்துணைப் பெரிய பகையுடையாரும் அதனின்று ஒருவகையால் தப்புவர்; வினைப்பகை வீயாது பின் சென்று அடும் - ஆயின், தீவினையாகிய பகையோ நீங்காது தொடர்ந்து சென்றவிடமெல்லாஞ் சென்று வருத்தும்.

தீவினைப் பயனுக்குத் தப்ப முடியா தென்பதாம்.