பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/159

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அறத்துப்பால் - இல்லறவியல் - தீவினையச்சம்

137



208. தீயவை செய்தார் கெடுத னிழறன்னை வீயா தடியுறைந் தற்று.

(இ-ரை) தீயவை செய்தார் கெடுதல் - பிறர்க்குத் தீமையான வற்றைச் செய்தவர் அவற்றின் விளைவால் தப்பாது கெடுதல் எதுபோன்றதெனின்; நிழல் தன்னை வீயாது அடி உறைந்த அற்று - ஒருவனது நிழல் அவன் எங்குச் செல்லினும் உடன் சென்று, இருள் வந்தவிடத்துக் கண்ணிற்கு மறையினும் மீண்டும் ஒளியில் தோன்றுமாறு, என்றும் அவனை விட்டு நீங்காது அவன் காலடியிலேயே தங்கிய தன்மையது.

மேல் 'வீயாது பின்சென் றடும்' என்றதை இங்கு உவமையால் விளக்கினார்.

209. தன்னைத்தான் காதல னாயி னெனைத்தொன்றுந் துன்னற்க தீவினைப் பால்.

(இ-ரை.) தான் தன்னைக் காதலன் ஆயின் - ஒருவன் உண்மையில் தன்னைக் காதலிப்பவனாயின்; தீவினைப்பால் எனைத்து ஒன்றும் துன்னற்க - பிறர்க்குத் தீமை செய்யும் பகுதியொடு எத்துணைச் சிறிதும் பொருந்தற்க.

பிறர்க்குச் செய்த தீவினை தப்பாது தனக்குத் துன்பம் விளைத்தலால், 'தன்னைத்தான் காதலனாயின்', என்றார். காதல் என்றது அறிவோடு கூடிய காதலை. தீவினைப் பகுதியொடு பொருந்தாமை யாவது 'தீவினை செய்யா' திருத்தலே. ஒன்று என்னும் எண்ணுப் பெயர் இங்குச் சிற்றளவுப் பொருளினது.

210. அருங்கேட னென்ப தறிக மருங்கோடித் தீவினை செய்யா னெனின்.

(இ-ரை.) மருங்கு ஓடித் தீவினை செய்யான் எனின் - ஒருவன் செந்நெறியினின்றும் ஒருபக்கமாக விலகிச் சென்று பிறர்க்குத் தீமை செய்யா னாயின்; அருங்கேடன் என்பது அறிக - அவன் கேடில்லாதவன் என்பதை அறிந்துகொள்க.

அருமை இங்கு இன்மை குறித்தது. அருங்கேடன் என்பது காலில்லாதவனை இல்லாக் காலன் என்றாற் போல்வது. இது செய்யுள் வழக்கு. மருங்கோடுதல் விரைந்து விலகுதல்.