பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/161

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அறத்துப்பால் - இல்லறவியல் - ஒப்புரவறிதல்

139



"பாரி பாரி யென்றுபல வேத்தி யொருவற் புகழ்வர் செந்நாப் புலவர் பாரி யொருவனு மல்லன் மாரியு முண்டீண் டுலகுபுரப் பதுவே" (புறம்.107)

என்னுங் கபிலர் பாட்டு இங்குக் கவனிக்கத்தக்கது. செய்வாரது வேண்டாமை அவர் செயலின்மேல் ஏற்றப்பட்டது. 'கொல்', 'ஓ' இரண்டும் அசைநிலைகள்.

212. தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு.

(இ-ரை.) தாள் ஆற்றித் தந்த பொருள் எல்லாம் - ஒப்புரவாளன் முயற்சி செய்து தொகுத்த செல்வம் முழுவதும்: தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு - தகுதியுடையார்க்குப் பல்வகையிலும் உதவி செய்தற்பொருட்டேயாம்.

இதனால், இடைவிடாது முயற்சி செய்து மேன்மேலும் பொருளீட்டாது இருந்துண்ணும் சோம்பேறித்தனமும், தகுதியில்லாதவர்க்குச் செய்யும் தவறான வேளாண்மையும் விலக்கப்பட்டன. "குந்தித் தின்றாற் குன்றுங் குன்றும்" ஆதலின், ஒப்புரவாளனுக்கு இடைவிடா முயற்சி வேண்டுமென் பதாம். பொருளுள்ளவரும் தமிழைக் கெடுப்பவரும் தகுதியற்றவராவர். ஒப்புரவாளன் என்னும் எழுவாய் அதிகாரத்தால் வந்தது.

213. புத்தே ளுலகத்து மீண்டும் பெறலரிதே யொப்புரவி னல்ல பிற.

(இ-ரை.) ஒப்புரவின் நல்ல - ஒப்புரவு போன்ற நல்ல செயல்களை; புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல் - தேவருலகத்திலும் இவ் வுலகத்திலும் பெறுதல்; அரிதே - அரிதேயாம்.

அரிது என்னும் சொல். தேவருலகத்தை நோக்கின் இன்மைப் பொருளும், இவ் வுலகத்தை நோக்கின் அருமைப் பொருளும் தருவதாம். ஏனெ னின், தேவருலகத்தில் ஈவாரும் ஏற்பாருமின்றி எல்லாரும் ஒருதன்மையர். இவ்வுலகத்தில் ஒப்புரவு செய்வார் விரல்விட் டெண்ணவும் வேண்டாத ஒருசிலரே. ஏகாரம் தேற்றம். 'பிற' அசைநிலை.