பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறத்துப்பால் - இல்லறவியல் - ஈகை

147



(இ-ரை.) தாம் உடைமை வைத்து இழக்கும் வன்கணவர் - தாம் உடைய பொருளை ஈயாது வைத்திருந்து பின்பு கள்வராலும் கொள்ளைக்காரராலும் இழக்கும் கன்னெஞ்சர்: ஈத்து உவக்கும் இன்பம் அறியார் கொல் - வறியார்க்கு வேண்டியவற்றைக் கொடுத்து மகிழும் இன்பத்தை அறியாரோ?

அறிந்தாராயின், தாம் வைத்திழந்து வருந்தாது வறியார்க்கீந்து மகிழ்ந்து மறுமையிலும் இன்புறுவர் என்பது கருத்து. 'கொல்' ஐயம்.

229. இரத்தலி னின்னாது மன்ற நிரப்பிய
தாமே தமிய ருணல்.

(இ-ரை.) நிரப்பிய தாமே தமியர் உணல் - தாம் ஈட்டக் கருதிய பொருட் குறையை நிரப்பவேண்டி வறியார்க்கொன்றீயாது தாமே தமித்துண்டல்; மன்ற - திண்ணமாக; இரத்தலின் இன்னாது - இரத்தலினும் தீயதாம்.

ஆசைக்கோரளவில்லை யாதலின், ஈயாத கஞ்சர் மேன்மேலும் பொருளீட்டற் பொருட்டு இடைவிடாது உடலையும் உள்ளத்தையும் வருத்தி, எத்துணைப் பொருளீட்டினும் எள்ளளவும் பொந்திகை (திருப்தி) யின்மை யால் உண்மையிற் செல்வராயினும் உள்ளத்தில் வறியராய், இன்பமும் அறப் பயனும் ஒருங்கே தரும் பாத்துண்டலின்றி நடைப்பிணமாய் உழல்வதினும்: ஆசையுங் கவலையுமில்லாத இரப்போர் உடல் வருத்தமின்றித் தாம் பெற்றதைக் கொண்டு மகிழ்வதோடு. தாம் இரப்பெடுத்ததையும் பகிர்ந்துண்ணும் வாழ்க்கை மேலாதலின்; 'இரத்தலி னின்னாது' என்றார். 'மன்ற தேற்றப்பொருளிடைச்சொல். நிரப்பிய செய்யிய என்னும் வாய்பாட்டு எதிர்கால வினையெச்சம்


230. சாதலி னின்னாத தில்லை யினிததூஉ
மீத லியையாக் கடை.

(இ-ரை.) சாதலின் இன்னாதது இல்லை - ஒருவனுக்கு இறத்தலைப் போலத் துன்பந் தருவது வேறொன்றுமில்லை; அதுவும் ஈதல் இயையாக் கடை இனிது - அவ் விறப்பும் வறியார்க்கொன்றீதல் இயலாவிடத்து இன்பந் தருவதாம்.

ஈகையாளனுக்கு இறப்புத் துன்பத்தினும் ஈயாத்துன்பம் பெரியதும் பொறுத்தற்கரியது மாதலின், சாதல் அவனுக்கு இனிதென்றார். இது வெளிப் படை. இனி, ஈயாத கஞ்சர் உலகத்திலிருத்தல் தகாது என்பது குறிப்பு. “ஈயாத