பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/174

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

152

திருக்குறள்

தமிழ் மரபுரை




யும் சாரும் என்னும் நெறிமுறைபற்றி வையத்தார்க் கெல்லாம் வசை யென் றார். 'பெறாஅ இசைநிறை யளபெடை.

239. வசையிலா வண்பயன் குன்று மிசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.

(இ-ரை.) இசை இலா யாக்கை பொறுத்த நிலம் - புகழைச் செய்யாத வுடம்பைச் சுமந்த நிலம்; வசை இலா வண்பயன் குன்றும் -பழிப்பில்லாத வளமுள்ள விளைச்சல் குறையும்.

உயிரோடு கூடியிருந்தும் அதனாற் பயன் பெறாமையின் 'யாக்கை' என்றார். மக்களின் தன்மைக் கேற்ப அவர் வாழும் நிலமுமிருக்கும் என்பது.

"எவ்வழி நல்லவ ராடவ
ரவ்வழி நல்லை வாழிய நிலனே”

(புறம்.187)

என்னும் ஒளவையார் கூற்றானும் அறியப்படும். இனி, உடம்பு பெரும்பாலும் நிலத்தின் கூறாதலின். தன்னைப்போற் பயன்படாத தன் கூற்றைச் சுமப்பது தனக்கிழி வென்னும் வெறுப்பினால் நிலம் தன் வளங்குன்றும் எனவும் ஒரு கருத்துத் தோன்ற நின்றது. பயன் குன்றும் என்பது பயன்படும் என்பது போல ஒருசொற் றன்மைப்பட்டதாகும்.

240.வசையொழிய வாழ்வாரே வாழ்வா ரிசையொழிய
வாழ்வாரே வாழா தவர்.

(இ-ரை.) வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார் - தமக்குப் பழிப்பில்லாமல் வாழ்பவரே உயிர் வாழ்பவராவர்; இசை ஒழிய வாழ்வாரே வாழாதவர் புகழின்றி வாழ்பவரே உயிரோடிருந்தும் இறந்தவராவர்.

இனி, புகழொடு வாழ்பவரே சிறப்பாகவும் செழிப்பாகவும் வாழ்பவராவர்; அஃதிலார் இழிவாகவும் வறுமையிலுங் காலங் கழிப்பார் போன்றவரே என்று உரைகூறினும் அமையும். கூறும் பொருள் வலியுறற்பொருட்டு உடன்பாட்டு வடிவிலும் எதிர்மறை வடிவிலுங் கூறினார்.

இதனால் இல்லற வாழ்க்கையின் சிறந்த இம்மைப் பயன் புகழே என்பது கூறப்பட்டது. இதைக் குறித்தற்கே இவ் வதிகாரமும் இல்லறவியலின் இறுதி யில் வைக்கப்பட்டது. இக் குறளும் இவ் வதிகாரத்தின் இறுதியதாயிற்று.