பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/181

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அறத்துப்பால் - துறவறவியல் - அருளுடைமை

159




(இ-ரை.) இருள் சேர்ந்த இன்னா உலகம் புகல் - இருள் திணிந்த துன்பவுலகமாகிய நரகத்துட் புகுதல்; அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை - அருள் நிறைந்த நெஞ்சையுடைய துறவியருக்கில்லை.

தீயுழியும் அளறும் போல இருளுலகமும் நரக வகையாம்.

244. மன்னுயி ரோம்பி யருளாள்வாற் கில்லென்ப
தன்னுயி ரஞ்சும் வினை.

(இ-ரை.) மன் உயிர் ஓம்பி அருள் ஆள்வாற்கு - மற்ற உயிர்களை யெல்லாம் பேணி அவற்றினிடத்து அருள் பூண்பவனுக்கு: தன் உயிர் அஞ்சும் வினை இல் என்ப - தன்னுயிர் அஞ்சுவதற் கேதுவான தீவினைகள் இரா என்று கூறுவர் அறிந்தோர்.

"தன்னுயிர் போல் மன்னுயிரையும் எண்ண வேண்டும்" என்னும் பழமொழியில், மன் என்னுஞ் சொல் மற்ற என்று பொருள்படுதலால், அதை யொத்த இவ்விடத்தும் அப் பொருள் உரைக்கப்பட்டது. அஞ்சும் வினை தன்னதாகவும் பிறரதாகவு மிருக்கலாம். தன் வினையாயின் மறுமைத் துன்பமும் பிறர் வினையாயின் இம்மைத் துன்பமும் நோக்கிய அச்சமாகும். உயர்ந்த அருளறம் பூண்டோன் தீவினை செய்யான் என்பதும், அவனால் அருள் செய்யப் பெற்றவனும் நன்மைக்குத் தீமை செய்யான் என்பதும் கருத்து.

245. அல்ல லருளாள்வார்க் கில்லை வளிவழங்கு
மல்லன்மா ஞாலங் கரி.

(இ-ரை.) அருள் ஆள்வார்க்கு அல்லல் இல்லை - அருள் பூண்டவர்க்கு இம்மையிலும் ஒரு துன்பமுமில்லை; வளி வழங்கும் மல்லல் மா ஞாலம் கரி - இதற்குக் காற்று இயங்குகின்ற வளமுள்ள பெரிய மாநிலத்திலுள்ள மக்களெல்லாரும் சான்றாளராவர்.

அருளுடையார் துன்பப்பட்டதை ஒருவரும் கண்டறியாமையின், எல்லாருஞ் சான்றாளராவர் என்றார். ஞாலத்தார் சான்றாளரெனவே. இம்மையிலென்பது பெறப்பட்டது. 'ஞாலம்' இடவாகுபெயர். ஞாலத்தின் மேற் பரப்பிற் காற்று வழங்காத இடமே யின்மையால், ஞாலம் முழுவதையுங் குறிக்க 'வளி வழங்கும்' என்னும் அடை கொடுத்தார் என்று கொள்ளலாம்.

இனி, அனந்தநாத நயினார் சமணச்சார்பாக இக் குறட்குக் கூறும் உரை வருமாறு: