பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/183

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அறத்துப்பால் - துறவறவியல் - அருளுடைமை

161



(இ-ரை.) பொருள் அற்றார் ஒருகால் பூப்பர் - ஏதேனும் ஒருவகையிற் செல்வத்தை யிழந்தவர், முயற்சியால் மீண்டும் ஒருகால் அதைப் பெற்றுப் பொலிவடைவர்; அருள் அற்றார் மற்று ஆதல் அரிது - ஆயின், அருட் பண்பை யிழந்தவரோ ஒரேயடியாய் அழிந்தவராவர்; பின்பு ஒருகாலும் ஆக்கம் பெறார்.

செல்வத்தை யிழந்தவர் மீண்டும் செல்வம் பெற்று இவ்வுலக இன்பத்தை நுகரலாம்; ஆயின் அருளைக் கைவிட்டவர் மறுமையில் வீட்டின்பம் நுகர்வதற்கு மீண்டும் இம்மையில் முயற்சி செய்ய முடியாது என்பது கருத்து. 'மற்று' பின்மைப் பொருளது.

249. தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றாற் றேரி
னருளாதான் செய்யு மறம்.

(இ-ரை.) அருளாதான் செய்யும் அறம் தேரின் - உயிர்களிடத்து அருள் செய்யாதவன் செய்யும் அறத்தின் தன்மையை ஆராயின்; தெருளாதான் மெய்ப்பொருள் கண்ட அற்று - தெளிந்த அறிவில்லாதவன் மெய்ப்பொருள் உணர்ந்தாற்போலும்.

தெளிந்த அறிவில்லாதவன் மெய்ப்பொருளுணர முடியாது. அது போல் அருளில்லாதவன் அறஞ்செய்ய முடியாது என்பது கருத்து. மெய்ப்பொருள் (தத்துவம்) என்பது, என்றும் நுண்வடிவாகவேனும் பருவடிவாக வேனும் மறைந்தோ வெளிப்பட்டோ அழியாதிருக்கும் தனிப் பொருள் அல்லது அத்தகைய பொருட்டொகுதி. இல்லறங்கட்கு அன்புபோல் துறவறங் கட்கு அருள் மூலம் என்பது கூறப்பட்டது. 'ஆல்' அசைநிலை.

250. வலியார்முன் றன்னை நினைக்க தான்றன்னின்
மெலியார்மேற் செல்லு மிடத்து.

(இ-ரை.) தான் தன்னின் மெலியார்மேல் செல்லுமிடத்து - ஒருவன் அருளில்லாமையால் தன்னினும் எளியவரை வருத்துமாறு அவர்மேற் செல்லும் பொழுது; வலியார் முன் தன்னை நினைக்க - தன்னினும் வலியவர் தன்னை வருத்த வரும்போது தான் அவர் முன் அஞ்சி நிற்கும் நிலையை நினைக்க.

தலைமைபற்றி வலியார்','மெலியார்' என உயர்திணைமேல் வைத்துக் கூறியது அஃறிணையையுந் தழுவும். தன் குற்றந் தனக்குத் தோன்றாதாகலின்,