பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/187

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அறத்துப்பால் - துறவறவியல் - புலான்மறுத்தல்

165



(இ-ரை.) புலால் பிறிது ஒன்றன் புண் - புலால் என்பது வேறோர் உடம்பின் புண்ணே; அது உணர்வார்ப் பெறின் உண்ணாமை வேண்டும் - அவ்வுண்மையை அறியப் பெறின் அதை உண்ணாதிருத்தல் வேண்டும்.

உண்மையை உணர்தலாவது நோய்ப்பட்டதென்றும் துப்புரவற்ற தென்றும் அருவருப்பானதென்றும் அறிதல். அங்ஙனம் அறியின் உண்ணா ரென்பது கருத்து. 'புலாஅல்' இசை நிறையளபெடை. அது வுணர்வார் என்பதின் வகர வுடம்படுமெய் தொக்கது.

258. செயிரிற் றலைப்பிரிந்த காட்சியா ருண்ணா ருயிரிற் றலைப்பிரிந்த வூன்.

(இ-ரை.) செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் - மயக்கம் என்னும் குற்றத்தினின்று நீங்கிய தெள்ளறிவினர்; உயிரின் தலைப்பிரிந்த ஊன் உண்ணார் – ஓர் உயிரினின்று நீங்கிய வுடம்பை உண்ணார்.

உயிரினின்று நீங்கியது பிணமென்று உணர்தலின் உண்ணாரென்றார். 'தலைப்பிரிதல்' என்பது ஒரு சொற்றன்மைப் பட்ட கூட்டுச்சொல். மயக்கம் ஐயமுந் திரிபும்.

259. அவிசொரிந் தாயிரம் வேட்டலி னொன்ற

       னுயிர்செகுத் துண்ணாமை நன்று.

(இ-ரை.) அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் - தீயின்கண் நெய் முதலிய வுணவுகளைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும்; ஒன்றன் உயிர் செகுத்து உண்ணாமை நன்று - ஒரு விலங்கின் உயிரைப் போக்கி அதன் உடம்பைத் தின்னாமை நன்றாம்.

ஆரிய வேள்விகள் கொலைவேள்விக ளாதலானும், ஆயிரம் வேள்விப் பயனினும் ஓருயிரியைக் கொல்லாமையின் பயன் பெரியதென்றமையானும், அவை விலக்கப்பட்டனவாம்.

பாட வேறுபாடு.

அவிசொரிந் தாயிரம் வேட்டலன் றொன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று.