பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறத்துப்பால் - துறவறவியல் - தவம்

169



(இ-ரை.) மற்றையவர்கள் - துறவிய ரல்லாத மற்ற இல்லறத்தார்; துறந்தார்க்குத் துப்புரவு வேண்டித் தவம் மறந்தார்கொல் - துறவியர்க்கு ஊணுடையும் உறையுளும் மருந்தும் முதலியன கொடுத்துதவுதலை விரும்பியே, தாம் தவஞ் செய்தலை மறந்தார் போலும்!

துத்தல் உண்ணுதல் அல்லது நுகர்தல். துப்புரவு நுகரப்படும் பொருள்கள். தவம் சிறந்ததே யாயினும், எல்லாருந் துறவியராயின் தவஞ்செய்வார்க்கு இன்றியமையாதவற்றை உதவுவார் ஒருவருமில்லாது போய்விடுவராதலின், அவ் வுண்மையை ஓர் ஐயந் தழுவிய தற்குறிப்பேற்ற அணியால் உணர்த்தினார். 'கொல்' ஐயம்.

264.ஒன்னார்த் தெறலு முவந்தாரை யாக்கலு

மெண்ணிற் றவத்தான் வரும்.

(இ-ரை.) ஒன்னார்த் தெறலும் - அறியாமையால் தமக்கு மாறாக வந்த வலியோரையுந் தீயோரையும் சாவித்தலும்; உவந்தாரை ஆக்கலும் - அறிந்ததினால் தம்மை விரும்பித் தம் உதவி நாடி வந்த எளியோரை வாழ்வித்தலும்; எண்ணின் தவத்தான் வரும் - தவத்தோர் கருதுவாராயின் அவர் தவ வலிமையால் அவை கூடும்.

"நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும்," 

(28)

"குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி

கணமேயுங் காத்த லரிது”

(29)

என்று ஏற்கெனவே துறவியரின் ஆக்க வழிப்பாற்றல் கூறப்பட்டிருத்தல் காண்க.

265. வேண்டிய வேண்டியாங் கெய்தலாற் செய்தவ

மீண்டு முயலப் படும்.

(இ-ரை.) வேண்டிய வேண்டிய ஆங்கு எய்தலால் - தவத்தின் பயனாக மறுமையில் தாம் விரும்பிய பேறுகளையெல்லாம் விரும்பியவாறே பெறக் கூடிய நிலைமையிருத்தலால்: செய்தவம் ஈண்டு முயலப்படும் - செய்ய வேண்டிய தவம் இம்மையில் அறிவுடையோரால் முயன்று செய்யப்படும்.