பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170

திருக்குறள்

தமிழ் மரபுரை



'ஈண்டு முயலப்படும்' என்றதனால் மறுமையிற் பயன்படும் என்பது பெறப்பட்டது. 'வேண்டிய' என்றவை மண்ணின்பமும் விண்ணின்பமும் வீட்டின்பமுமாகிய மூவகை யின்பங்கள்.

இல்லறத்தாலும் இம் மூன்றையும் பெறலாம். இவ் விரு வழிகளுள் ஒன்றைத் தெரிந்துகொள்வது அவரவர் ஆற்றலையும் விருப்பத்தையும் பொறுத்தது. அன்புடைமை, விருந்தோம்பல், நடுநிலைமை, ஒப்புரவறிதல், ஈகை முதலிய அறங்கள் ஆரியர் மேற்கொள்ளுதற்கு அரியனவாகலின், அவர் துறவறத்தையே விரும்புவர். அதனாலேயே, "மேற்கதி வீடுபேறுகள் தவத்தானன்றி எய்தப்படா" என்றார் பரிமேலழகர். கூடாவொழுக்கமும் போலித் துறவும் பூண்டுகொண்டே ஒருவன் மெய்த்துறவிபோல் நடிக்கலாம். இந் நடிப்பு இல்லறத்தில் இயலாது.

266. தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லா ரவஞ்செய்வா ராசையுட் பட்டு.

(இ-ரை.) தவம் செய்வார் தம் கருமம் செய்வார் - உலகப் பற்றைத் துறந்து தவஞ் செய்வாரே தம் கருமத்தைச் செய்பவராவர்; அல்லார் ஆசையுள் பட்டு அவம் செய்வார் - அவரல்லாதார் பிறவிக் கேதுவான பொருளின்ப ஆசைவலையுள் அகப்பட்டுத் தமக்குக் கேடு செய்பவரே யாவர்.

'கருமம்' என்றது நன்மையான கருமத்தை, தொடக்க மிலியாக (அநாதியாக)க் கணக்கற்ற பிறவிகளிற் பிறந்திறந் துழன்றுவரும் ஆதன் (ஆன்மா), அப் பிறவித் துன்பத்தினின்று விடுதலை பெற்றுப் பெயராப் பேரின்பந் துய்த்தற்கு, உடலை யொடுக்கி ஆசையை யடக்கி உள்ளத்தை யொருக்கி இறைவனொடு ஒன்றுவிக்கும் தவத்தை மேற்கொள்வதே தகுந்த வழியாதலின், அதைச் செய்பவரைத் 'தங்கருமஞ் செய்வார்' என்றும்; நிலையாது திடுமென்று மாய்வதும் பிணி மூப்பால் நலிவதுமாகிய உடம்பில் நின்று மின்னல்போல் தோன்றி மறையுஞ் சிற்றின்பத்தை நுகர்தற்பொருட்டு எல்லையில்லாது தொடர்ந்து செல்லும் பிறவித் துன்பத்திற்கேதுவான தீவினைகளைச் செய்து கொள்பவரை 'அவஞ் செய்வார்' என்றுங் கூறினார்.

ஆசைக்கோ ரளவில்லை யாதலால், தன்பொருட்டும் மனைவி மக்கள் பொருட்டும் ஆசைக்கடலுள் அழுந்தச் செய்யும் இல்லறத்தினும், தன்னந் தனியாயிருந்து தவத்தின் வாயிலாய் ஆசையறுக்கும் துறவறமே, வீடுபேற்றிற்குச் சிறந்த வழி யென்பது கருத்து.