பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறத்துப்பால் - துறவறவியல் - தவம்

171



இல்லறத்தானும் தன் கடமையை அறநூற்படி செய்வானாயின் தவஞ் செய்தவனாவான் என்றும், பகவற்கீதையில் கூறியவாறு பயன் நோக்காது தன் கடமையைச் செய்பவன் கருமவோகி என்றும், இதற்குப் பொருள் கூறுவது பொருந்தாது. தவம் ஈரறத்திற்கும் ஓரளவிற் பொதுவாகுமே யன்றி இல்லற வினை துறவற வினையாகாது.

267. சுடச்சுடரும் பொன்போ லொளிவிடுந் துன்பஞ் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.

(இ-ரை.) சுடச் சுடரும் பொன்போல் - உருக்கப்படும் பொன் தீத் தன்னைச் சுடச்சுடத் தன் மாசு மறு நீங்கி ஒளி மிகுவது போல; நோற்கிற்பவர்க்குத் துன்பம் சுடச்சுட ஒளிவிடும் - தவஞ் செய்ய வல்லவர்க்கு அதனால் வருந் துன்பம் தம்மை வருத்த வருத்தத் தம் தீவினைத் தன்மையும் நீங்கித் தெள்ளறிவு மிகும்.

தவம் என்னும் சொல்லின் வேர்ப்பொருள் இக் குறளிலுள்ள உவமம் பொருளிரண்டிலும் விளக்கமாயிற்று. 'கில்' ஆற்றலுணர்ந்தும் இடைநிலை.

268. தன்னுயிர் தானறப் பெற்றானை யேனைய மன்னுயி ரெல்லாந் தொழும்.

(இ-ரை.) தன் உயிர் தான் அறப் பெற்றானை - தன்னுயிரைத் தனக்கு முற்றுரிமையாகப் பெற்றவனை; ஏனைய மன் உயிர் எல்லாம் தொழும் அங்ஙனம் பெறாத மற்ற மக்களெல்லாம் கைகூப்பி வணங்குவர்.

முற்றுரிமையாகப் பெறுதலாவது தவத்தால் தன் ஐம்புலவாயை முற்றும் அடக்குதல். அறப்பெறுதல் முற்றும் பெறுதல். "மன்னுயிர்க் கெல்லா மினிது" (68) என்னுங் குறளடியிற் போன்றே. இங்கும் மன் என்பது மாந்தனைக் குறித்தது. உயிர் என்னும் அஃறிணை வடிவிற்கேற்பத் தொழும் என்னும் பலவின்பாற் படர்க்கை வந்தது, 'உயிர்' வகுப்பொருமை. தொழுதல் தூய்மையும் ஆக்க. வழிப்பாற்றலும்பற்றி. இருவகைப் பற்றுந் துறத்தல் துறவதிகாரத்திற் கூறப்படுதலால், 'தானற' என்பதற்குத் 'தான் என்னும் முனைப்பற' என்று இங்குப் பொருளுரைக்கத் தேவையில்லை.

269. கூற்றங் குதித்தலுங் கைகூடு நோற்றலி னாற்ற றலைப்பட் டவர்க்கு.