பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறத்துப்பால் - துறவறவியல் - கூடாவொழுக்கம்

173



லின்மையால் தாம் சிறிதுபோழ்து விட்ட சிற்றின்பத்தை மீண்டும் (மறைவாக) நுகர்வர். இது தவத்தொடு பொருந்தாமையின் தவத்தின்பின் வைக்கப்பட்டது.

ஊட்டம் மிக்க உணவும் உடலைக் கொழுக்கவைத்துக் கூடாவொழுக்கத்திற்குத் தூண்டுமாதலின், அதுவுந் துறவறத்திற் கடியத்தக்கதே.

271. வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்க ளைந்து மகத்தே நகும்.

(இ-ரை.) வஞ்ச மனத்தான் படிற்று ஒழுக்கம் - பிறரை வஞ்சிக்கும் மனத்தை யுடையவனின் பொய்யொழுக்கத்தை; பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும் - அவனுடம்பாய்க் கலந்துள்ள ஐம்பூதங்களும் கண்டு தம்முள்ளே எள்ளிச் சிரிக்கும்.

படிறு பொய். பிறர் காணவில்லை யென்று மறைவாகத் திருடும் திருடனின் திருட்டை, குறைந்த பக்கம் எங்கும் நிலைத்துள்ள நிலம் வளி வெளி என்னும் மூன்று பூதங்களேனும் தப்பாமற் காணும். ஆயின், கூடா வொழுக்கத்தானது மனத்தின் பொய்த்தன்மையையும் மறைந்த காம வொழுக்கத்தையும் அவனுடற் கூறாகவும் ஐம்பொறிகளாகவு முள்ள ஐம்பூதங்களும் காணுவதால், 'பூதங்க ளைந்தும்' என்றும், அவை அவனுக்கும் பிறர்க்கும் தெரியாமல் நகுவதால் 'அகத்தே நகும்' என்றும் கூறினார். இது மறைவொழுக்கத்திற்குத் தெய்வச்சான்றும் மனச்சான்றும் மட்டுமன்றிப் பூதச் சான்றும் உள்ளதெனக் கூறியவாறு. பிறரை ஏமாற்றுவதால் 'வஞ்சமனம்' என்றார்.

272. வானுயர் தோற்ற மெவன்செய்யுந் தன்னெஞ்சந் தானறி குற்றப் படின்.

(இ-ரை.) தன் நெஞ்சம் அறிகுற்றம் தான் படின் - தன் நெஞ்சமே குற்றமென் றறிந்ததை ஒருவன் செய்வானாயின்; வான் உயர் தோற்றம் எவன் செய்யும் - அவனது வானளாவ வுயர்ந்த தவக்கோலம் பிறரை அச்சுறுத்துவதன்றி வேறு என்ன பயன்படுவதாம்?

வானுயர்வு என்றது காட்சிப்பொருளைக் கருத்துப்பொருளாக மாற்றிய பொருள்வகை மாற்று. தனக்கு நன்மையே செய்யும் தன் சொந்த வுறுப்பு என்பதுபடத் 'தன்னெஞ்சம்' என்றும், நெஞ்சம் குற்றமென்றறிந்ததை நெஞ்சமே காணச் செய்வதால், 'தானறி குற்றம்' என்றும் நெஞ்சாரக் குற்றஞ் செய்யும்