பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறத்துப்பால் - துறவறவியல் - கூடாவொழுக்கம்

175


(இ-ரை.) பற்று அற்றேம் என்பார் படிற்று ஒழுக்கம் - பிறர் தம்மைப் பெரிதும் மதிக்குமாறு யாம் இருவகைப் பற்றும் துறந்தேம் என்று சொல் வாரின் மறைவொழுக்கம்: எற்று எற்று என்று ஏதம் பலவும் தரும் - பின்பு தம் தீவினைப் பயனை நுகரும்போது, அந்தோ என் செய்தேம் என் செய்தேம் என்று தனித்தனியே வருந்திப் புலம்புமாறு, அவருக்குப் பல்வகைத் துன்பங்களையும் உண்டாக்கும்.

சொல்லளவிலன்றிச் செயலளவிற் பற்றறாமையின் 'பற்றற்றே மென்பார்' என்றும், தீவினைப்பயன் கடுமை நோக்கி 'எற்றெற்று' என்றும் கூறினார். தவவடிவில் மறைந்து பிறர் மகளிரொடு கூடுதல் இருமடித் தீவினையாதலின், அதன் விளைவும் மிகக் கொடிதாயிற்று. எற்று என்பது கடந்த நிலைமை நோக்கி வருந்துவதைக் குறிக்கும் இடைச்சொல். என்னது - எற்று (என் + து) = எத்தன்மைத்து.

"எற்றென் கிளவி இறந்த பொருட்டே" (தொல். இடை.15)

என்பது தொல்காப்பியம்,

276. நெஞ்சிற் றுறவார் துறந்தார்போல் வஞ்சித்து

வாழ்வாரின் வன்கணா ரில்.

(இ-ரை.) நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் - உள்ளத்திற் பற்றறாது பற்றற்றவர்போல் நடித்துப் பிறரை யேமாற்றி வாழும் பொய்த் துறவியரைப்போல; வன்கணார் இல் - கொடியவர் இவ் வுலகத்தில் இல்லை.

கன்னியரையும் பிறர் மனைவியரையுங் கற்பழித்தலும், அடைக்கலப் பொருளைக் கவர்தலும், உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்தலும், கொள்ளையடித்தலும், தம் விருப்பம் நிறைவேறும்பொருட்டு எத்துணை நல்லவரையுங் கொல்லுதலும், ஆகிய தீவினைகளிலெல்லாம் வல்லவரும், கடுகளவும் மனச்சான்று இல்லவருமாதலின் கூடாவொழுக்கத்தினர்போற் கொடியார் பிறரில்லையென்றார். பற்றற்றவர்போல் நடிப்பவரும் நடியாதவருமாகிய இருவகைக் கொடியோருள், நடிப்பவர் மிகக் கொடியவர் என்பது கருத்து.

277. புறங்குன்றி கண்டனைய ரேனு மகங்குன்றி

மூக்கிற் கரியா ருடைத்து.