பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176

திருக்குறள்

தமிழ் மரபுரை



(இ-ரை.) குன்றிப் புறம் கண்ட அனையரேனும் - வெளிக்கோலத்தில் குன்றிமணியின் பின்புறம் கண்டாற் போலச் செம்மையுடையவ ரேனும்; அகம் குன்றி மூக்கின் கரியார் உடைத்து - உள்ளத்தில் அதன் மூக்குப் போல இருண்டிருப்பவரை உடையது இவ் வுலகம்.

செம்மை கருமை என்பன குன்றிமணியை நோக்கின் நிறப்பண்பும், கூடா வொழுக்கத்தினரை நோக்கின் குணப்பண்பும் ஆகும். புறம் என்னுஞ் சொல் குன்றிக்கும் கூடாவொழுக்கத்தினர்க்கும் பொதுவாக முன்நின்றது. இங்ஙனம் நில்லாக்கால் பின்னர் வரும் அகம் என்னுஞ் சொற்கு முரணின்மை காண்க. 'குன்றி' ஆகுபெயர்.

278.

மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்.

(இ-ரை.) மனத்தது மாசு ஆக - தம் மனத்தின்கண் குற்ற மிருக்கவும்; மாண்டார் நீராடி - தவத்தால் மாட்சிமைப்பட்டவர்போற் பலகால் குளிர்ந்த நீரில் மூழ்கி; மறைந்து ஒழுகும் மாந்தர் பலர் - அதன்கண்ணே மறைந்தொழுகும் மாந்தர் உலகத்துப் பலர்.

'மாசு' காம வெகுளி மயக்கங்கள். நீராடியதால் உடம்பழுக்கேயன்றி உள்ளத்தழுக்கு நீங்கிற்றிலர் என்பதை யுணர்த்த 'மனத்தது மாசாக' என்றார். 'மாண்டார் நீராடி' என்பதற்கு "மாட்சிமைப்பட்டாரது நீர்மையை யுடையராய்" என்று மணக்குடவர் உரைத்ததும் ஓரளவு பொருத்த முடையதே. 'நீராடி' இரட்டுறல்.

279.

கணைகொடி தியாழ்கோடு செவ்விதாங் கன்ன
வினைபடு பாலாற் கொளல்.

(இ-ரை.) கணை கொடிது - அம்பு வடிவில் நேராயிருந்தாலும் செயலிற் கொடியது: யாழ் கோடு செவ்விது - யாழ் தண்டால் வளைந்ததேனும் செயலால் இனியது; ஆங்கு அன்ன வினைபடுபாலால் கொளல் - அங்ஙனமே தவஞ்செய்வாருள்ளும் யார் கொடியர் யார் நேர்மையர் என்பதை. அவரவர் கோலத்தாற் கொள்ளாது செயல்வகையாலேயே அறிந்துகொள்க.

கொல்லும் அம்பு கொடியது; இசையால் இன்புறுத்தும் யாழ் இனியது. அங்ஙனமே தீயவொழுக்கமுள்ளவர் கொடியவர்; நல்லொழுக்கமுள்ளவர்